தூத்துக்குடி சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட அண்ணாநகர் – டூவிபுரம் பகுதிகளில் பொதுமக்களின் நீண்டநாள் கோரிக்கை நிறைவேற்றப்பட்டு புதிய ரேஷன் கடை தொடங்கி வைக்கப்பட்டது. வடக்கு மாவட்ட திமுக செயலாளரும் சமூகநலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை அமைச்சருமான கீதாஜீவன், பொதுமக்களின் மனு அடிப்படையில் தொடங்கப்பட்ட இந்த புதிய ரேஷன் கடையை இன்று திறந்து வைத்து பொருட்கள் வழங்கி துவக்கி வைத்தார்.

சில வருடங்களுக்கு முன்பு அண்ணாநகர் பகுதியில் நடைபெற்ற குறைதீர் முகாமில், வயதானவர்கள் மற்றும் பெண்களுக்கு தூரத்தில் உள்ள ரேஷன் கடைக்கு செல்லும் சிரமத்தை பொதுமக்கள் அமைச்சரிடம் தெரிவித்தனர். இதனைத் தொடர்ந்து தற்காலிகமாக டூவிபுரம் சட்டமன்ற உறுப்பினர் அலுவலகத்தில் ரேஷன் வசதி ஏற்படுத்தப்பட்டது.

மேலும் தொகுதி மேம்பாட்டு நிதியில் ரூ.13 லட்சம் செலவில் புதிய நிரந்தர ரேஷன் கடை கட்டப்பட்டது. கட்டுமானம் முடிவடைந்ததைத் தொடர்ந்து அமைச்சர் கீதாஜீவன் இன்று அதனை பொதுமக்கள் பயன்பாட்டிற்கு திறந்து வைத்தார்.

நிகழ்ச்சியில் பொது விநியோக திட்ட அலுவலர்கள், கூட்டுறவு சங்க அதிகாரிகள், திமுக நகர மற்றும் வட்ட நிர்வாகிகள், கவுன்சிலர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். அமைச்சர் மக்கள் நல கோரிக்கையை உடனடி நடவடிக்கையால் நிறைவேற்றியதற்கு பொதுமக்கள் நன்றியும் பாராட்டும் தெரிவித்தனர்.