தூத்துக்குடி மாவட்டம் ஆறுமுகநேரி காவல் நிலையத்தில் பணியாற்றிய சிங்கப்பெண் அதிரடிப்படையைச் சேர்ந்த பெண் காவலருக்கு காவல் ஆய்வாளர் திலீபன் பாலியல் தொல்லை அளித்ததாகவும், இதுகுறித்து கேட்க வந்த அவரது கணவரை துப்பாக்கியால் மிரட்டியதாகவும் குற்றச்சாட்டுகள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளன.

இந்த நிலையில், தன் மீதான குற்றச்சாட்டுகளுக்கு பதிலளிக்கும் வகையில் காவல் ஆய்வாளர் திலீபன் வீடியோ ஒன்றை வெளியிட்டு விளக்கம் அளித்துள்ளார். அந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது. வீடியோவில் பேசிய திலீபன், "நான் ஆறுமுகநேரி காவல் நிலையத்தில் இருந்து இடமாற்றம் செய்யப்பட்டு சேரன்மாதேவி காவல் நிலையத்தில் பணியாற்ற உள்ளேன். என் மீது பாலியல் புகார் தொடர்பாக தனியார் தொலைக்காட்சி ஒன்றில் வெளியான செய்தி வேகமாக பரவி வருகிறது. அதனால் எனது தரப்பு நியாயத்தை மக்களிடம் தெரிவிக்க வேண்டிய அவசியம் ஏற்பட்டுள்ளது" என்றார்.

மேலும், "என் காவல் நிலையத்தில் 6 முதல் 7 பெண் காவலர்கள் பணிபுரிகின்றனர். அவர்கள் பணியில் ஏதேனும் குறை இருந்தால் கண்டிப்பேன். ஆனால் அதற்கு அப்பாற்பட்டு எந்தவித தவறான அணுகுமுறையும் என்னிடம் இல்லை. அவர்களை என் பிள்ளைகள் போலத்தான் கருதுகிறேன். வயதில் மூத்தவர்களாக இருந்தாலும் அதே மரியாதையோடும் அன்போடும் நடத்துவேன்" என்று தெரிவித்தார். தொடர்ந்து பேசிய அவர், "என்னுடன் பணிபுரியும் பெண் காவலர்கள் யாரும் இத்தகைய புகார் அளித்திருக்க வாய்ப்பில்லை என்று நான் முழுமையாக நம்புகிறேன். தமிழ்நாடு காவல்துறையில் வாட்ஸ்அப் அதிகமாக பயன்படுத்துபவர்களில் நானும் ஒருவன். எனது கைப்பேசியை அதிகாரிகள் எப்போது வேண்டுமானாலும் ஆய்வுக்கு எடுத்துக் கொள்ளலாம். அதற்கு நான் முழுமையாக தயாராக இருக்கிறேன்" என்றார்.

மேலும், "என் மீது குற்றம் இருந்தால் சட்டப்படி வழக்குப் பதிவு செய்யலாம். ஆனால் உண்மைத் தன்மை இல்லாத தகவல்களை கற்பனையாக பரப்ப வேண்டாம். என்னுடன் பணியாற்றும் 66 காவலர்களில் யாராவது ஒருவர் கூட நான் இவ்வாறு நடந்து கொண்டதாக கூறினால், நான் காவல்துறை பணியில் இருந்து நிரந்தரமாக விலகத் தயாராக இருக்கிறேன்" என சவால் விடுத்தார். காவல் ஆய்வாளர் திலீபனின் இந்த விளக்க வீடியோ சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வரும் நிலையில், இந்த விவகாரம் குறித்து காவல்துறை உயரதிகாரிகள் மேற்கொள்ளும் நடவடிக்கைகள் மற்றும் விசாரணை முடிவுகள் மீது பொதுமக்கள் கவனம் திரும்பியுள்ளது.