தூத்துக்குடி சட்டமன்ற உறுப்பினரும் மீன்வளத்துறை அமைச்சருமான ஸ்ரீநாத், இன்று (01.06.2026) நள்ளிரவு 12.20 மணியளவில் தூத்துக்குடி அரசு பொது மருத்துவமனையில் திடீர் ஆய்வு மேற்கொண்டார். மருத்துவமனையின் பல்வேறு வார்டுகளுக்குச் சென்று சிகிச்சை பெற்று வந்த நோயாளிகளிடம் நேரடியாக குறைகளை கேட்டறிந்தார். மருத்துவ சேவைகள், அடிப்படை வசதிகள் மற்றும் நோயாளிகளுக்கான சிகிச்சை முறைகள் குறித்து ஆய்வு செய்தார்.

மேலும், பணியில் ஈடுபட்டிருந்த மருத்துவர்கள், செவிலியர்கள் மற்றும் மருத்துவமனை ஊழியர்களிடம் மருத்துவ வசதிகள், நோயாளிகளின் தேவைகள் மற்றும் மருத்துவமனையின் செயல்பாடுகள் குறித்து கேட்டறிந்து ஆய்வு நடத்தினார்.

அனுமதிக்கப்பட்டிருந்த நோயாளிகளிடம், தங்களது குறைகள் மற்றும் தேவைகளை எப்போது வேண்டுமானாலும் நேரடியாக தெரிவிக்கலாம் என்றும், மருத்துவமனையில் மேலும் என்னென்ன வசதிகள் ஏற்படுத்தப்பட வேண்டும் என்பது குறித்தும் கருத்துக்களை கேட்டறிந்தார். அமைச்சருடன் வந்திருந்த அவரது நேர்முக உதவியாளர்கள் நோயாளிகள் மற்றும் பொதுமக்கள் தெரிவித்த கோரிக்கைகளை பதிவு செய்து கொண்டனர்.

பொதுமக்கள் மற்றும் நோயாளிகள் முன்வைத்த கோரிக்கைகள் மீது உடனடியாக நடவடிக்கை எடுக்கப்படும் என அமைச்சர் ஸ்ரீநாத் உறுதியளித்தார்.