தூத்துக்குடி கடலோரப் பகுதியில் உள்ள உப்பளங்களை பாதுகாக்க வேண்டும் என்ற உப்பு உற்பத்தியாளர்களின் கோரிக்கையை தமிழக முதல்வர் ஜோசப் விஜயின் நேரடி கவனத்திற்கு கொண்டு சென்று உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என மீன்வளத்துறை அமைச்சர் ஸ்ரீநாத் உறுதியளித்தார்.
தூத்துக்குடி துறைமுகத்தை ஒட்டிய கடலோரப் பகுதியில் கப்பல் கட்டும் விரிவாக்கத் திட்டப் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இந்தத் திட்டத்தால் முள்ளக்காடு, முத்தையாபுரம், புல்லாவழி, பழையகாயல் உள்ளிட்ட பகுதிகளில் உள்ள உப்பளங்கள் பாதிக்கப்படும் சூழல் உருவாகியுள்ளதாக கூறி, உப்பு உற்பத்தியாளர்கள் மற்றும் தொழிலாளர்கள் பல்வேறு கட்ட போராட்டங்களை முன்னெடுத்து வருகின்றனர். இந்நிலையில், உப்பளங்களை பாதுகாக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்திய உப்பு உற்பத்தியாளர்கள், மீன்வளத்துறை அமைச்சர் ஸ்ரீநாத்தை நேரில் சந்தித்து கோரிக்கை மனு அளித்ததுடன், உப்பளங்களை நேரில் பார்வையிடுமாறும் அழைப்பு விடுத்தனர்.
அதனைத் தொடர்ந்து அமைச்சர் ஸ்ரீநாத், தூத்துக்குடி கடற்கரையை ஒட்டிய முள்ளக்காடு பகுதியில் உள்ள உப்பளங்களுக்கு நேரில் சென்று ஆய்வு மேற்கொண்டார். அங்கு உப்பளப் பகுதிகளில் நடந்து சென்று பார்வையிட்ட அவர், உப்பு அம்பாரங்களில் இருந்து உப்பை கையில் எடுத்து ஆய்வு செய்ததுடன், தற்போதைய நிலைமைகள் குறித்து உற்பத்தியாளர்களிடம் கேட்டறிந்தார். அப்போது உப்பு உற்பத்தியாளர்கள், “மகாத்மா காந்தியின் உப்புச் சத்தியாகிரகப் போராட்ட காலம் முதல் சுமார் 93 ஆண்டுகளாக இப்பகுதியில் உப்பளத் தொழில் நடைபெற்று வருகிறது. ஆயிரக்கணக்கான குடும்பங்களின் வாழ்வாதாரமாக உள்ள இந்தத் தொழிலை பாதிக்காமல் பாதுகாக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்று கோரிக்கை வைத்தனர்.
இதற்கு பதிலளித்து பேசிய அமைச்சர் ஸ்ரீநாத், “இங்கு நிலவும் உண்மையான சூழ்நிலைகளை நேரில் அறிந்து கொள்வதற்காகவே வந்துள்ளேன். உப்பு உற்பத்தியாளர்களின் கோரிக்கைகள் மற்றும் இப்பகுதியின் நிலவரம் குறித்து முதல்வர் ஜோசப் விஜயின் கவனத்திற்கு நேரடியாக எடுத்துச் செல்வேன். அதன் பின்னர் தேவையான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும்” என்றார். முன்னதாக முள்ளக்காடு வந்த அமைச்சருக்கு உப்பு உற்பத்தியாளர் சங்க செயலாளர் சேகர் உள்ளிட்ட நிர்வாகிகள் மந்திரமூர்த்தி, சின்னராஜ், முகேஷ் சண்முகவேல், சிவகர், பாலசுப்பிரமணியன், ஈபால், ஸ்ரீராம் பொன்ராம், பிரபாகர், பாரத், ராமர் மற்றும் தொழிற்சங்கத்தினர், பொதுமக்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர்.
இந்த நிகழ்வில் தமிழக வெற்றிக்கழகத்தின் தூத்துக்குடி மத்திய மாவட்ட செயலாளர் எஸ்.டி.ஆர். சாமுவேல்ராஜ், பகுதி செயலாளர் இசக்கிமுத்து, வட்ட செயலாளர்கள், கிளை நிர்வாகிகள் மற்றும் ஏராளமான பொதுமக்கள் கலந்து கொண்டனர்.