தூத்துக்குடி அருகே உள்ள வட்டக்கோவில் நாசரேத் திருமண்டலத்தின் கிருஷ்ணராஜபுரம் சேகரத்தைச் சேர்ந்த எபனேசர் ஆலயத்தில் ஏழை மற்றும் எளிய குடும்பங்களைச் சேர்ந்த பள்ளி மாணவ, மாணவிகளுக்கு கல்வி உதவிப் பொருட்கள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.
நிகழ்ச்சியில் நூற்றுக்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகளுக்கு நோட்டு புத்தகங்கள், எழுதுப் பொருட்கள், தண்ணீர் பாட்டில்கள், பென்சில்கள், பேனாக்கள், உணவுப் பெட்டிகள் (டப்பா) மற்றும் பள்ளிப்பைகள் வழங்கப்பட்டன. ஆலய சேகர குரு விஜய் மோகன்ராஜ் தலைமை வகித்து சிறப்பு ஜெபம் செய்து கல்வி உதவிப் பொருட்களை மாணவர்களுக்கு வழங்கினார்.
கல்வியின் முக்கியத்துவம் குறித்து அவர் மாணவர்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தி வாழ்த்துரை வழங்கினார். இந்நிகழ்ச்சிக்கான அனைத்து ஏற்பாடுகளையும் எபனேசர் ஆலய ஆண்கள் ஐக்கிய சங்கத்தினர் சிறப்பாக செய்திருந்தனர். மாணவர்கள், பெற்றோர்கள் மற்றும் திருச்சபை உறுப்பினர்கள் திரளாக கலந்து கொண்டு நிகழ்ச்சியை சிறப்பித்தனர்.