தூத்துக்குடி மாவட்டம் ஆறுமுகநேரி காவல் நிலையத்தில் பணியாற்றிய காவல் ஆய்வாளர் திலீபன் மீது பாலியல் தொல்லை குற்றச்சாட்டு தொடர்பான செய்திகள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளன. இந்த நிலையில், தன் மீதான குற்றச்சாட்டுகளை மறுத்து திலீபன் இன்ஸ்டாகிராம் வீடியோ வாயிலாக விளக்கம் அளித்துள்ளார்.

அவர் வெளியிட்டுள்ள வீடியோவில், ஆறுமுகநேரி காவல் நிலையத்திலிருந்து சேர்மாதேவி காவல் நிலையத்திற்கு பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார். மேலும், தனியார் தொலைக்காட்சிகள் மற்றும் சமூக வலைதளங்களில் தனது பெயருடன் பரவி வரும் பாலியல் குற்றச்சாட்டு செய்திகளில் உண்மை இல்லை என்றும் கூறியுள்ளார்.

“முதல் செய்திதான் வேகமாக பரவுகிறது. பின்னர் உண்மை வெளிவந்தாலும் அது அதே வேகத்தில் மக்களை சென்றடைவதில்லை. அதனால் என் தரப்பு விளக்கத்தை மக்களிடம் கொண்டு சேர்க்க வேண்டிய அவசியம் ஏற்பட்டுள்ளது” என்று அவர் தெரிவித்துள்ளார். தன்னுடன் பல பெண் காவலர்கள் பணியாற்றி வருவதாகவும், அவர்களை தனது பிள்ளைகளைப் போலவே கருதி நடத்துவதாகவும் அவர் கூறியுள்ளார். பணியில் தவறுகள் இருந்தால் கண்டிப்பேன் தவிர, வேறு எந்த வகையிலும் அவர்களிடம் தவறாக நடந்து கொண்டதில்லை எனவும் விளக்கம் அளித்துள்ளார்.

மேலும், தனது கைபேசி மற்றும் தொடர்புடைய தகவல்களை அதிகாரிகள் எந்த நேரத்திலும் ஆய்வு செய்யத் தயாராக இருப்பதாகவும், தன் மீது குற்றச்சாட்டு உண்மையாக இருந்தால் சட்டப்படி நடவடிக்கை எடுக்கலாம் என்றும் தெரிவித்துள்ளார். “என்னுடன் பணியாற்றும் காவலர்களில் யாரேனும் ஒருவர் கூட நான் தவறாக நடந்துகொண்டதாக உறுதிப்படுத்தினால், காவல்துறை பணியில் இருந்து விலகத் தயாராக இருக்கிறேன்” எனவும் அவர் தெரிவித்துள்ளார்.