தூத்துக்குடி முத்தையாபுரம் மகாலட்சுமி நகரைச் சேர்ந்தவர் புலவர் கணேசன் (72). இவர் பிரபல சினிமா மற்றும் தொலைக்காட்சி தொடர் நடிகை தீபாவின் தந்தை ஆவார். மேலும், தூத்துக்குடி மாநகராட்சி 57-வது வார்டு காங்கிரஸ் கமிட்டி தலைவராகவும் செயல்பட்டு வருகிறார்.

முத்தையாபுரம் பகுதியில் உள்ள பத்ரகாளியம்மன் கோவிலின் தர்மகர்த்தாவாக இருந்து சிறப்பான நிர்வாகத்தை வழங்கியதற்காக பாராட்டுப் பெற்றவர். மேலும், கோவில் அருகே பெருந்தலைவர் காமராஜர் சிலை அமைக்கும் பணிகளிலும் தீவிரமாக ஈடுபட்டு வந்துள்ளார். இதனால் கோவில் நிர்வாகம் மற்றும் காமராஜர் சிலை அமைக்கும் விவகாரத்தில் சிலருடன் முன்விரோதம் இருந்து வந்ததாக கூறப்படுகிறது.

இந்த நிலையில், நேற்று இரவு முத்தையாபுரம் பஜார் பகுதியில் உள்ள ஒரு டீக்கடை முன்பு புலவர் கணேசன் நின்று கொண்டிருந்தார். அப்போது மோட்டார் சைக்கிளில் வந்த மர்ம கும்பலைச் சேர்ந்த சிலர் திடீரென கையில் அரிவாளுடன் பாய்ந்து வந்து அவரை சரமாரியாக வெட்டியதாக கூறப்படுகிறது. இதைக் கண்ட அப்பகுதி மக்கள் சத்தமிட்டு ஓடி வந்ததால் தாக்குதலில் ஈடுபட்டவர்கள் அங்கிருந்து தப்பிச் சென்றனர். இந்த தாக்குதலில் புலவர் கணேசனின் தலை உள்ளிட்ட உடலின் பல்வேறு பகுதிகளில் பலத்த வெட்டுக்காயங்கள் ஏற்பட்டன.

உயிருக்கு போராடிய நிலையில் இருந்த அவரை அங்கிருந்தவர்கள் மீட்டு உடனடியாக தூத்துக்குடி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு சென்று சேர்த்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்த சம்பவம் குறித்து முத்தையாபுரம் காவல் நிலைய இன்ஸ்பெக்டர் கிங்ஸ்லி தேவ் ஆனந்த் தலைமையில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும், இந்த வழக்கில் தொடர்புடையதாக சந்தேகிக்கப்படும் 2 பேரை பிடித்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். பிரபல நடிகையின் தந்தை மீது நடைபெற்ற இந்த அரிவாள் வெட்டு சம்பவம் தூத்துக்குடி பகுதியில் பெரும் பரபரப்பையும் பதற்றத்தையும் ஏற்படுத்தியுள்ளது.