தூத்துக்குடி மாவட்டம் ஸ்ரீவைகுண்டம் பகுதியைச் சேர்ந்த இளம் பெண் ஒருவரை வேலை வாங்கித் தருவதாக கூறி அழைத்துச் சென்று, மயக்க மருந்து கொடுத்து பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கியதாக தவெக நிர்வாகிகள் மீது எழுந்துள்ள குற்றச்சாட்டு பெரும் அதிர்ச்சியையும் வேதனையையும் ஏற்படுத்தியுள்ளதாக தூத்துக்குடி வடக்கு மாவட்ட திமுக செயலாளர் பி. கீதாஜீவன் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:

“சட்டமன்றத் தேர்தல் முடியும் வரை, எந்தத் தொடர்பும் இல்லாத விஷயங்களுக்குக்கூட அப்போதைய முதலமைச்சரும், திமுக தலைவர் தளபதி மு.க. ஸ்டாலினையும் குற்றம்சாட்டி தொடர்ந்து விமர்சனங்களையும், பொய்யான பிரச்சாரங்களையும் மேற்கொண்டீர்கள். ஆனால் தற்போது ஸ்ரீவைகுண்டம் பகுதியைச் சேர்ந்த இளம் பெண் ஒருவரை உங்கள் தவெக கட்சி நிர்வாகிகள் இருவரே மயக்க மருந்து கொடுத்து பாலியல் வன்கொடுமை செய்ததாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இதற்கும் நாங்கள் ஆறு மாதம் கழித்துதான் கேள்வி கேட்க வேண்டுமா, முதல்வர் விஜய் அவர்களே?

இதுதான் உங்கள் ஆட்சியில் சட்டம்-ஒழுங்கு செயல்படும் விதமா? எதற்கெடுத்தாலும் ஆறு மாதம் அவகாசம் வேண்டும் என்றால், அந்தக் காலகட்டத்தில் நடைபெறும் சட்டம்-ஒழுங்கு சீர்கேடுகளுக்கு யார் பொறுப்பு? பெண்களின் பாதுகாப்புக்கு முக்கியத்துவம் அளிப்போம் என்று கூறி ஆட்சிக்கு வந்த நீங்கள், இந்தச் சம்பவம் தொடர்பாக என்ன பதில் சொல்லப் போகிறீர்கள்?” என கேள்வி எழுப்பியுள்ளார்.

பெண்களுக்கு எதிரான குற்றங்களில் சம்பந்தப்பட்டவர்கள் மீது பாரபட்சமின்றி கடுமையான நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என்றும், பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு நீதி கிடைக்க அரசு உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார்.