“தமிழ்நாடு தலைகுனியாது திராவிட மாடல் ஆட்சி தொடரும். எந்த அழுத்தத்துக்கும் அஞ்சமாட்டோம்” என்று சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை அமைச்சர் கீதா ஜீவன் தெரிவித்தார்.

தூத்துக்குடி சிதம்பரம் நகர் பேருந்து நிறுத்தம் அருகே, தூத்துக்குடி வடக்கு மாவட்ட திமுக சார்பில் “தமிழ்நாடு தலைகுனியாது” என்ற தலைப்பில் பொதுக்கூட்டம் நடைபெற்றது. அமைச்சர் தலைமை தாங்கினார். மாநகரச் செயலாளர் ஆனந்த சேகரன், மாநகராட்சி மேயர் ஜெகன் பெரியசாமி, மாநில இளைஞர் அணி துணைச் செயலாளர் மற்றும் தொகுதி பார்வையாளர் இன்பா ஏ.என். ரகு உள்ளிட்டோர் முன்னிலை வகித்தனர்.

பிரையன்ட் நகர் பகுதி செயலாளர் பி.பி. ராமகிருஷ்ணன் வரவேற்றார். தலைமைக்கழக பேச்சாளர்கள் கான்ஸ்டன்டைன் ரவீந்திரன், சரத்பாலா ஆகியோர் சிறப்பு உரையாற்றினர். அண்ணா நகர் பகுதி கழகச் செயலாளர் ரவீந்திரன் நன்றி கூறினார்.

“கொரோனா கால சவாலை சமாளித்தோம்”

அமைச்சர் பேசியதாவது “முதல்வர் மு.க. ஸ்டாலின் பதவி ஏற்றபோது மாநிலம் கடுமையான கொரோனா நெருக்கடியில் இருந்தது. நிதி தட்டுப்பாடு இருந்தபோதிலும் மக்களை பாதுகாப்பதே முன்னுரிமை என செயல்பட்டோம். ஆக்சிஜன் பற்றாக்குறை, மருத்துவ வசதிகள் அழுத்தம் போன்ற பிரச்சினைகள் இருந்தன. கூடுதல் படுக்கைகள், ஆக்சிஜன் வசதி, புதிய மருத்துவ பணியாளர்கள் நியமனம் ஆகியவற்றின் மூலம் நிலைமை கட்டுக்குள் கொண்டுவரப்பட்டது,” என்றார்.

வளர்ச்சியில் முன்னிலை

தமிழ்நாடு பொருளாதார வளர்ச்சியில் முன்னிலை வகிக்கிறது. தனிநபர் வருமானம் உயர்ந்துள்ளது; வறுமைக் கோட்டுக்கு கீழ் உள்ளோர் எண்ணிக்கை குறைந்துள்ளது என்றார். பெண்கள் உயர்கல்வி சேர்க்கை அதிகரித்துள்ளது; தொழில்துறையில் பெண்களின் பங்கு உயர்ந்துள்ளது; சுயதொழில் கடனுதவி திட்டங்கள் விரிவடைந்துள்ளன என்றும் குறிப்பிட்டார்.

தூத்துக்குடி மேம்பாடு

தூத்துக்குடியில் மழைநீர் வடிகால் அமைப்பு, சாலை மற்றும் பூங்கா மேம்பாடு, நகர் நல மையங்கள், 210 மின்மாற்றிகள் அமைப்பு, மீன்பிடி துறைமுக விரிவாக்கம் உள்ளிட்ட பணிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக தெரிவித்தார். கிராமப்புறங்களில் வீடுகள், முதியோர் மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கான உதவித்தொகைகள் தொடர்ந்து வழங்கப்படுகின்றன என்றும் கூறினார்.

எதிர்க்கட்சிக்கு கடும் விமர்சனம்

“தேர்தல் நெருங்கும் போது மட்டுமே சில கட்சிகள் கூட்டங்கள் நடத்துகின்றன. கடந்த நாலரை ஆண்டுகளில் மக்கள் பிரச்சினைகளில் அக்கறை காட்டாதவர்கள் தற்போது மட்டும் தோன்றுகின்றனர்,” என்று குற்றம்சாட்டினார். “ஒன்றிய அரசு அமைப்புகளை பயன்படுத்தி திராவிட மாடல் அரசை ஒடுக்கலாம் என்ற எண்ணம் ஒருபோதும் பலிக்காது. எதற்கும் அஞ்சமாட்டோம்,” என்றார்.

மேலும், “பிரதமர் நரேந்திர மோடி தமிழகத்திற்கு வரும்போது திருக்குறள் சொல்லுவது மட்டுமே போதாது; தமிழகத்திற்கு வழங்க வேண்டிய நிதி மற்றும் திட்டங்களில் உரிய பங்கு வழங்கப்பட வேண்டும்,” என்றும் அவர் கூறினார். இறுதியாக, “2026 சட்டமன்றத் தேர்தலில் மக்கள் மீண்டும் நம்பிக்கை வாக்கு அளித்து திராவிட மாடல் ஆட்சியை தொடரச் செய்வார்கள்,” என்று அமைச்சர் உறுதியுடன் தெரிவித்தார்.

கூட்டத்தில் மாவட்ட, மாநகர நிர்வாகிகள், அணி பொறுப்பாளர்கள், மாமன்ற உறுப்பினர்கள், கழகத் தொண்டர்கள் மற்றும் பொதுமக்கள் திரளாக கலந்து கொண்டனர்.