காலத்தால் அழியாத காதல் காவியமாக போற்றப்படும் அன்பே வா திரைப்படம், புரட்சித் தலைவர் எம்.ஜி. ராமச்சந்திரன் நடித்த மாபெரும் வெற்றி படமாகும். இத்திரைப்படம் புதுப்பொலிவுடன் மீண்டும் வெளியிடப்பட்டு, தூத்துக்குடி பாலகிருஷ்ணா திரையரங்கு வளாகத்தில் திரையிடப்பட்டது.
இதனை கொண்டாடும் விதமாக அதிமுக வர்த்தக அணி செயலாளர் முன்னாள் அமைச்சர் சி.த. செல்லப்பாண்டியன் நேற்று மாலை திரையரங்கிற்கு வருகை தந்து, திரைப்படம் காண வந்த ரசிகர் மற்றும் ரசிகைகளுக்கு இனிப்பு வழங்கினார். மேலும், தனது சொந்த செலவில் டிக்கெட் கட்டணத்தை வழங்கி, ரசிகர்களுடன் சேர்ந்து அமர்ந்து திரைப்படத்தை ரசித்தார்.
பழைய நினைவுகளை மீட்டெடுத்த ‘அன்பே வா’ திரைப்படம் திரையிடப்பட்ட வேளையில், ரசிகர்கள் உற்சாகக் குரல்களால் திரையரங்கமே திருவிழா சூழலாக மாறியது. முன்னாள் அமைச்சர் சி.த. செல்லப்பாண்டியனின் இந்த செயல் ரசிகர்கள் மத்தியில் பாராட்டைப் பெற்றது.