பாஜக தூத்துக்குடி தெற்கு மாவட்டம், வடக்கு மண்டலத்தில் தெருமுனைக் கூட்டம் நேற்று ஞாயிற்றுக்கிழமை (22.02.2026) மாலை 7 மணியளவில் அலங்கார தட்டு பெட்ரோல் பங்க் அருகில் நடைபெற்றது. சக்தி கேந்திர பொறுப்பாளர் எம். எஸ். சங்கர் கணேஷ் தலைமையில், மண்டல தலைவர் சுதா முன்னிலையில் கூட்டம் நடந்தது.
சிறப்பு அழைப்பாளர்களாக ஊடகப் பிரிவு மாவட்ட தலைவர் ஜெயக்குமார், OBC அணியின் மாநில செயற்குழு உறுப்பினர் கே. பாலமுருகன், பொருளாதாரப் பிரிவு மாவட்ட செயலாளர் முருகேசன், சமூக ஊடகப் பிரிவு மாவட்ட செயலாளர் கலை செல்வன், காயல்பட்டினம் மண்டல் பிரபாரி எம். டி. அர்ஜுன் பாலாஜி ஆகியோர் கலந்து கொண்டு உரையாற்றினர்.
கூட்டத்தில் பேசிய ஜெயக்குமார், மத்திய அரசு பல்வேறு மக்கள் நலத்திட்டங்களை தமிழகத்திற்கு தொடர்ந்து கொண்டு வந்து கொண்டிருக்கிறது என்றும், அவற்றை முழுமையாக செயல்படுத்த மாநில அரசு தடை செய்கிறது என்றும் குற்றம்சாட்டினார்.
மேலும், நரேந்திர மோடி தலைமையில் தூத்துக்குடிக்கு கொண்டு வரப்பட்டுள்ள சூப்பர் ஸ்பெஷாலிட்டி மருத்துவமனை செயல்பட்டால் பொதுமக்களுக்கு மிகப்பெரிய பயன் கிடைக்கும் என்றும், தனியார் மருத்துவமனைகளுக்கு இணையான அனைத்து வசதிகளும் அதில் இடம்பெறும் என்றும் தெரிவித்தார். அந்த மருத்துவமனை செயல்படாமல் தடுக்கப்பட்டு, அதை மகப்பேறு மருத்துவமனையாக மாற்ற முயற்சி மேற்கொள்ளப்படுவதாகவும் அவர் கூறினார்.
அதனைத் தொடர்ந்து, கடந்த பிப்ரவரி 13ஆம் தேதி நிர்வாக பணிகளை எளிதாக்க ‘சேவா தீர்த்த’ அலுவலகம் தொடங்கப்பட்டதாகவும், அதே நாளில் பெண்கள், விவசாயிகள் மற்றும் சாதாரண மக்களுக்கான ஐந்து புதிய நலத்திட்டங்கள் அறிமுகப் படுத்தப்பட்டதாகவும் அவர் குறிப்பிட்டார்.
அந்த திட்டங்களில் ஒன்றான ‘கேஸ்லெஸ் ட்ரீட்மென்ட்’ மூலம் விபத்தில் சிக்கியவர்கள் எவ்வித முன்பணமும் செலுத்தாமல் ரூ.1 லட்சம் வரை மருத்துவ சிகிச்சை பெறலாம் என்றும், காவல்துறை எஃப்.ஐ.ஆர் அல்லது மருத்துவ காப்பீடு கட்டாயமில்லை என்றும் விளக்கினார். ஒவ்வொரு உயிரையும் காக்கும் நோக்கில் இந்த திட்டம் அறிமுகப் படுத்தப்பட்டுள்ளதாகவும் ஜெயக்குமார் தெரிவித்தார். கூட்டத்தில் பாஜக நிர்வாகிகள் மற்றும் பொதுமக்கள் பலர் கலந்து கொண்டனர்.