தூத்துக்குடியில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் மேடையிலேயே அரசியல் மிரட்டல் விடுக்கப்பட்டதாக குற்றம்சாட்டி, மாவட்ட பாரதிய ஜனதா கட்சி தலைவர் சித்ராங்கதன் கடுமையாக எதிர்ப்பு தெரிவித்துள்ளார்.


22.02.2026 அன்று தூத்துக்குடி VVD சிக்னல் அருகே, அமைச்சர் கீதா ஜீவன் தலைமையில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் மேயர் ஜெகன் பெரியசாமி உரையாற்றியபோது, பாஜகவை குறிவைத்து மிரட்டல் விடுத்ததாக அவர் குற்றம்சாட்டியுள்ளார்.


இதுகுறித்து தெற்கு மாவட்ட பாஜக தலைவர் சித்ராங்கதன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:


தூத்துக்குடி மாவட்ட பாஜக மாவட்ட துணைத் தலைவர் சண்முக சுந்தரம், மாநகராட்சியில் நடைபெற்று வரும் ஊழல் மற்றும் பராமரிப்பு குறைபாடுகள் குறித்து அண்மையில் பத்திரிக்கை அறிக்கை வெளியிட்டிருந்தார். அதற்கு நேரடி பதில் அளிக்க முடியாத நிலையில், மேயர் பொதுமேடையில் ஆதாரமற்ற குற்றச்சாட்டுகளை முன்வைத்து திசைதிருப்ப முயன்றுள்ளார்.


“தெருமுனை பிரச்சாரம்” என்ற பெயரில் மாநில அரசுத் திட்டங்களை விமர்சிக்கிறார்கள் என்ற குற்றச்சாட்டு முற்றிலும் பொய்யானது. பொதுமக்களின் வரிப்பணத்தில் நடைபெறும் முறைகேடுகளை வெளிக்கொணருவது ஜனநாயக உரிமை. அதை தடுக்கவே அவதூறு மற்றும் மிரட்டல் அரசியல் மேற்கொள்ளப்படுகின்றது.


மேலும், “கூட்டம் நடத்த விடமாட்டோம்; களைக்க தொண்டர்களை இறக்குவோம்”, “30 ஆண்டுகளுக்கு முன் நடந்தது மீண்டும் நடக்கலாம்” என மேடையில் கூறியிருப்பது ஜனநாயகத்திற்கு எதிரான ஆபத்தான மொழி. இது பொதுஅமைதிக்கே சவால் விடுப்பதாகும்.


அராஜக அரசியல் எதையும் பாஜக ஏற்காது. ஆதாரங்களுடன் உண்மைகளை மக்களிடம் கொண்டு செல்லும் ஜனநாயகப் போராட்டமே எங்களின் வழி. தூத்துக்குடி மாநகராட்சியில் நடைபெறும் ஊழல் மற்றும் முறைகேடுகள் தொடர்ந்து வெளிச்சத்திற்கு கொண்டுவரப்படும்.


அதிகாரத்தில் இருப்போர் பொறுப்புடன் நடந்து கொள்ள வேண்டும். மிரட்டலால் உண்மையை மூட முடியாது என சித்ராங்கதன் வலியுறுத்தியுள்ளார்.