தூத்துக்குடியில் செயல்பட்டு வரும் வி.வி.டி. நினைவு மேல்நிலைப் பள்ளி வளாகத்தில், சாலை பாதுகாப்பு விதிமுறைகள் குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி சிறப்பாக நடைபெற்றது.
ஈரோடு நகரைச் சேர்ந்த மரபு நாடகக் களம் குழுவினரின் நிறுவனர் பரணி தரன் தலைமையில், சாலை பாதுகாப்பு விதிகளை விளக்கும் கருத்துப்பூர்வமான நாடகம் அரங்கேற்றப்பட்டது. ஹெல்மெட் அணிதல், சீட் பெல்ட் பயன்பாடு, வேகக் கட்டுப்பாடு, மது அருந்தி வாகனம் ஓட்டுவதின் ஆபத்து, போக்குவரத்து சிக்னல்கள் கடைப்பிடிப்பு போன்ற அம்சங்கள் நாடக வடிவில் தாக்கத்துடன் எடுத்துரைக்கப்பட்டன.
நிகழ்விற்கு பள்ளித் தலைமை ஆசிரியர் கனகரத்தினமணி அவர்கள் தலைமை தாங்கி சிறப்புரை ஆற்றினார். மாணவர்கள் சாலை விதிகளை பின்பற்றுவது தனிநபர் பாதுகாப்புக்கே அல்லாமல் சமூகப் பொறுப்பும் ஆகும் என அவர் வலியுறுத்தினார்.
6ஆம் வகுப்பு முதல் 12ஆம் வகுப்பு வரை உள்ள மாணவர்கள் மற்றும் மாணவிகள் உற்சாகமாக கலந்து கொண்டு நிகழ்ச்சியை கவனமாகக் கண்டு பயன் பெற்றனர். ஆசிரியர்கள் மற்றும் பள்ளிப் பணியாளர்களும் நிகழ்வில் கலந்து கொண்டு மாணவர்களை உற்சாகப்படுத்தினர்.
நாடகத்தின் மூலம் வழங்கப்பட்ட இந்த விழிப்புணர்வு முயற்சி, மாணவர்களிடையே சாலை பாதுகாப்பு குறித்த பொறுப்புணர்வை உருவாக்கியதுடன், அனைவராலும் பாராட்டப்பட்டது.