ஸ்ரீவைகுண்டம் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட ஆதிராதபுரம் பஞ்சாயத்தில் உள்ள நவலெட்சுமிபுரம் மற்றும் திருக்கோளூர் பஞ்சாயத்திற்குட்பட்ட கீழபால்குளம் பகுதிகளில், குடிநீர், மின்விளக்கு, சாலை உள்ளிட்ட அடிப்படை வசதிகளை கூட செய்து தர முடியாத தி.மு.க. ஆட்சியின் அலட்சியத்தை கண்டித்து, தூத்துக்குடி தெற்கு மாவட்ட பா.ஜ. தலைவர் சித்ராங்கதன் தலைமையில், பாரதிய ஜனதா கட்சியினர் அப்பகுதி மக்களுடன் இணைந்து ஏரல் வட்டாட்சியரிடம் மனு அளித்தனர்.
இதனைத் தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய மாவட்ட தலைவர் சித்ராங்கதன், “தாமிரபரணி நதிக்கரையில் வசித்து வரும் நவலெட்சுமிபுரம் மற்றும் தெற்கு பால்குளம் பகுதிகளைச் சேர்ந்த மக்கள், கடந்த பத்து ஆண்டுகளுக்கும் மேலாக குடிநீர் இல்லாமல் அவதிப்பட்டு வருகின்றனர். வளர்ச்சி, சமூக நீதி என மேடைகளில் பேசும் ஆட்சியாளர்கள், அடிப்படை தேவையான குடிநீரை கூட மக்களுக்கு வழங்க முடியாத நிலையில் உள்ளனர். இது தி.மு.க. ஆட்சியின் முழுமையான தோல்வியை வெளிப்படுத்துகிறது” என்றார்.
மேலும் அவர் பேசுகையில், “இப்பகுதியை பிரதிநிதித்துவப்படுத்தும் எம்.எல்.ஏ., எம்.பி., ஆகியோர் சென்னையில் வசித்து அரசியல் வசதிகளை அனுபவித்து வருகின்றனர். ஆனால் மக்களின் பிரச்சனைகளை நேரில் வந்து பார்ப்பதற்கோ, தீர்வு காண்பதற்கோ அவர்களுக்கு நேரமில்லை. தாமிரபரணி ஆற்றில் வெள்ளம் வந்தால், வெள்ளம் வடிந்த பிறகே இப்பகுதிக்கு வந்து ஆய்வு நடத்துவது தான் இவர்களின் அரசியல் நாடகம். விவசாயிகள் உழைத்த பயிர்கள் அழிந்து, மாடுகளுக்கான தீவனமாக மாறிய பிறகே ஆய்வு நடத்தும் இந்த ஆட்சியால் மக்களுக்கு என்ன பயன்?” என கடுமையாக சாடினார்.
ஒரு வார காலத்திற்குள் குடிநீர் வசதி உள்ளிட்ட அடிப்படை தேவைகள் செய்து தரப்படாவிட்டால், அப்பகுதி மக்களுடன் இணைந்து பாரதிய ஜனதா கட்சி சார்பில் ஆழ்வார் திருநகரி பஜாரில் மிகப்பெரிய சாலை மறியல் போராட்டம் நடத்தப்படும் என்றும், மக்கள் பிரச்சனைகளுக்கு நிரந்தர தீர்வு காணும் வரை பா.ஜ.க தொடர்ந்து களப்போராட்டங்களை முன்னெடுக்கும் என்றும் அவர் எச்சரிக்கை விடுத்தார்.
இந்த நிகழ்வில் மாவட்ட பொதுச் செயலாளர்கள் கனல் ஆறுமுகம், செல்வராஜ், மாவட்ட செயலாளர்கள் சபரி, பானுமதி மோகன், மாவட்ட துணைத் தலைவர் நவமணிகண்டன், வழக்கறிஞர் பிரிவு தலைவர் சீனிவாசன், ஓபிசி அணி தலைவர் வெண்ணிமாலை, ஒன்றிய தலைவர் மணிகண்டன், ஒன்றிய பொதுச் செயலாளர் அந்தோணி, சரவணன், மாதவன், ஜெய்சிங், வேல்குமார், மாசானமுத்து, சத்தியநாராயணன், கிளை தலைவர் சுரேஷ்மணி உள்ளிட்ட பல்வேறு நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் கலந்து கொண்டனர்.