தூத்துக்குடி மாநகராட்சியில் பணியாற்றும் தூய்மைப் பணியாளர்களின் நலனை முன்னிறுத்தி, அவர்களுக்கு தினசரி காலை உணவு வழங்கும் திட்டம் இன்று தூத்துக்குடியில் தொடங்கப்பட்டது. தமிழக முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் மாநிலம் முழுவதும் இந்த விரிவாக்கத் திட்டத்தை தொடங்கி வைத்ததையடுத்து, தூத்துக்குடி மாநகராட்சியில் அதன் தொடக்க விழா அறிஞர் அண்ணா திருமண மண்டபத்தில் நடைபெற்றது.


இவ்விழாவிற்கு மாவட்ட ஆட்சியர் இளம் பகவத் தலைமை தாங்கினார். மாநகராட்சி ஆணையர் பிரியங்கா முன்னிலை வகித்தார். சமூக நலம் மற்றும் மகளிர் உரிமைத்துறை அமைச்சர் கீதா ஜீவன் மற்றும் மாநகராட்சி மேயர் என்.பி. ஜெகன் பெரியசாமி ஆகியோர் கலந்து கொண்டு, தூய்மைப் பணியாளர்களுக்கு காலை உணவு வழங்கி திட்டத்தை தொடங்கி வைத்தனர்.


விழாவில் பேசிய அமைச்சர் கீதா ஜீவன், “மாநகரங்களை சுத்தமாக வைத்திருக்கும் தூய்மைப் பணியாளர்களின் ஆரோக்கியம் பாதுகாக்கப்பட வேண்டும் என்பதே இந்தத் திட்டத்தின் நோக்கம். மனிதநேய அரசின் மற்றொரு அடையாளமாக இந்தத் திட்டம் விளங்குகிறது” என்றார்.


பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய மேயர் ஜெகன் பெரியசாமி,
“தூத்துக்குடி மாநகராட்சியின் 14 மண்டலங்களில் பணிபுரியும் 1,702 தூய்மைப் பணியாளர்களுக்கு இன்று முதல் காலை உணவு வழங்கப்படுகிறது. மேலும், ஷிப்ட் அடிப்படையில் பணியாற்றும் 42 பேருக்கு மதிய உணவும், 48 பேருக்கு இரவு உணவும் வழங்கப்பட்டு வருகிறது. இத்திட்டத்திற்காக மாநகராட்சி பொதுநிதியிலிருந்து ஆண்டுக்கு ரூ.2 கோடியே 75 லட்சம் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது” என தெரிவித்தார்.


இந்த நிகழ்ச்சியில் மாநகராட்சி பொறியாளர் தமிழ்ச்செல்வன், நகர் நல அலுவலர் சரோஜா, சுகாதார அலுவலர் ராஜபாண்டி, துணை மேயர் ஜெனிட்டா செல்வராஜ், கவுன்சிலர்கள் சுரேஷ்குமார், மும்தாஜ், தனலட்சுமி, மரிய கீதா, ராமு அம்மாள், ஆணையரின் நேர்முக உதவியாளர் துரைமணி, மேயரின் நேர்முக உதவியாளர் பிரபாகரன், பெருமாள் கோவில் அறங்காவலர் குழுத் தலைவர் செந்தில்குமார் உள்ளிட்டோர் மற்றும் ஏராளமான தூய்மைப் பணியாளர்கள், மாநகராட்சி பணியாளர்கள் கலந்து கொண்டனர்.