தூத்துக்குடி காரப்பேட்டை நாடார் ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் ஆசிரியர்கள் திடீர் உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டதால் கல்வி வட்டாரங்களில் பரபரப்பு நிலவுகிறது. இதனைத் தொடர்ந்து பள்ளிச் செயலாளரும் வழக்கறிஞருமான எம்.ஜி.எம். ரமேஷ் பத்திரிகையாளர் சந்திப்பில் விளக்கம் அளித்தார்.

அப்போது அவர் கூறியதாவது:
"நீதிமன்ற உத்தரவுப்படி 2020 ஆகஸ்ட் 4ஆம் தேதி முதல் பள்ளி செயலாளராக பொறுப்பேற்று பணியாற்றி வருகிறேன். பொறுப்பேற்றபோது பள்ளியில் தேர்ச்சி சதவீதம் 70 மட்டுமே இருந்தது. மாணவர்கள் நலனுக்காக திறன் மேம்பாட்டு பயிற்சி, சிறப்பு வகுப்புகள் உள்ளிட்ட பல நடவடிக்கைகள் மேற்கொண்டு தற்போது தேர்ச்சி சதவீதம் 99 ஆக உயர்ந்துள்ளது," என்றார்.

மேலும், “மாணவர்களின் நலனுக்காக மதிய உணவுடன் கூடுதலாக தினமும் ரூ.1000 செலவிட்டு ஊட்டச்சத்து உணவுகள் வழங்கப்பட்டன. ஆனால் சில ஆசிரியர்கள் ஆன்லைன் டிரேடிங் மற்றும் ரியல் எஸ்டேட் தொழிலில் ஈடுபட்டு வந்தனர். அதனால் பள்ளி தொலைபேசிக்கு முக்கிய அழைப்புகள் வந்தால் அவர்களிடம் தெரிவிக்கும் திட்டத்தை அறிமுகப்படுத்தினோம். மேலும் வருகை பதிவு செய்ய ‘பயோமெட்ரிக்’ சிஸ்டம் அறிமுகப்படுத்தியதால் சிலர் அதிருப்தி அடைந்தனர்,” என்றும் கூறினார்.

“முந்தைய நிர்வாகத்தின் போது ஆசிரியர் நியமனத்தில் பணம் பெற்றது குறித்து விசாரணை நடத்தப்பட்டு நடவடிக்கை எடுக்கப்பட்டது. மாணவர் தேர்வு திருத்தங்களில் தவறுகள் செய்த ஆசிரியர்களுக்கு பணப்பலன்கள் நிறுத்தப்பட்டன. முறையாக பணி செய்யாத ஆசிரியரை பணி நீக்கம் செய்ததும் அதிருப்திக்கு காரணமானது. நீக்கப்பட்டவர், தற்போதைய மகமைச் செயலாளர் விநாயகமூர்த்தியின் உறவினர் என்பதனால் என்மீது பழிவாங்க முயற்சி மேற்கொள்கிறார்கள்,” என்றும் ரமேஷ் குற்றம்சாட்டினார்.

“கடந்த 15 ஆண்டுகளாக காரப்பேட்டை நாடார் மகமை பதிவு செய்யப்படாமல் உள்ளது. இதை சுட்டிக்காட்டியதும், மகமை தேர்தலைச் சட்டப்படி நடத்த வேண்டும் என வலியுறுத்தியதும், சிலர் எனக்கு எதிராக ஆசிரியர்களை தூண்டி பொய்க்குற்றச்சாட்டு சுமத்துகிறார்கள். ஆசிரியர்களிடம் எந்தவித பணமும் பெறவில்லை. அனைத்தும் சட்டப்படி தான் நடக்கின்றன,” என்றும் தெரிவித்தார்.

இந்நிலையில், ஆசிரியர்கள் சார்பில் வெளியிடப்பட்ட அறிக்கையில், “நேற்று மதியம் ரமேஷ் பள்ளிக்குள் அத்துமீறி நுழைந்து ஆசிரியர்களை மிரட்டினார். இவர் (26.10.2025) அன்று நடைபெற்ற மகமை பொதுக்குழுக் கூட்டத்தில் அடிப்படை உறுப்பினர் பதவியிலிருந்து நீக்கப்பட்டவர். இருப்பினும், பதவி ஆசையில் ஆசிரியர்களுக்கு கொலை மிரட்டல் விடுத்துள்ளார். இவர் கடந்த காலத்தில் ஆசிரியர்களை சாக்கடைத் தண்ணீரை மைதானத்தில் தெளிக்க வற்புறுத்தினார். தற்போது ஆசிரியர்களுக்குப் பாதுகாப்பே இல்லை,” என குற்றம்சாட்டினர்.

இந்த விவகாரத்தில் அரசு மற்றும் கல்வித்துறை தலையிட்டு, ஆசிரியர்களின் பணிப் பாதுகாப்பும் உயிர் பாதுகாப்பும் உறுதி செய்ய வேண்டும் என 42 ஆசிரியர்கள் மற்றும் அலுவலக பணியாளர்கள் கோரிக்கை விடுத்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.