தூத்துக்குடி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை அருகில் செயல்பட்டு வரும் அம்மா உணவகத்தில் மதிய உணவு வழங்கும் நேரம் முடிவதற்கு முன்பே உணவு தீர்ந்து போனதால் நோயாளிகள் மற்றும் பொதுமக்கள் கடும் சிரமத்திற்கு ஆளான சம்பவம் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.
அரசு மருத்துவமனைக்கு தினமும் ஆயிரக்கணக்கான நோயாளிகள் மற்றும் அவர்களது உறவினர்கள் வருகை தருகின்றனர். குறைந்த விலையில் தரமான உணவு கிடைப்பதால் பெரும்பாலானோர் அம்மா உணவகத்தை நம்பியே உள்ளனர். அம்மா உணவகத்தில் வைக்கப்பட்டுள்ள அறிவிப்பு பலகையின்படி காலை 7 மணி முதல் 10 மணி வரை காலை உணவும், மதியம் 1 மணி முதல் 3 மணி வரை மதிய உணவும் வழங்கப்பட வேண்டும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது. ஆனால் இன்று வியாழக்கிழமை மதியம் ஒரு மணியளவில் உணவகத்திற்கு வந்த பொதுமக்கள் மற்றும் நோயாளிகளுக்கு, உணவு ஏற்கனவே தீர்ந்து விட்டதாக ஊழியர்கள் தெரிவித்ததாக கூறப்படுகிறது.
இதனால் மதிய உணவுக்காக காத்திருந்த பலர் ஏமாற்றத்துடன் திரும்பிச் செல்ல வேண்டிய நிலை ஏற்பட்டது. குறிப்பாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள நோயாளிகளின் உறவினர்கள் மற்றும் வெளியூரிலிருந்து வந்த பொதுமக்கள் கடும் அவதிக்குள்ளானதாக தெரிவித்தனர். இதுகுறித்து பொதுமக்கள் கூறுகையில், “கடந்த ஆட்சிக் காலத்தில் அம்மா உணவகம் அறிவிக்கப்பட்ட நேரமான மதியம் 3 மணி வரை செயல்பட்டு வந்தது. தற்போது மதியம் 1 மணிக்கே உணவு தீர்ந்து விடுகிறது. தினசரி வருகை தரும் மக்களின் எண்ணிக்கையை கணக்கிட்டு போதுமான அளவில் உணவு தயாரிக்க வேண்டும்” என குற்றம்சாட்டினர்.
மேலும், அரசு மருத்துவமனை அருகே உள்ள அம்மா உணவகத்தில் உணவு பற்றாக்குறை ஏற்படாத வகையில் நடவடிக்கை எடுத்து, அறிவிக்கப்பட்ட நேரம் வரை உணவு வழங்கப்படுவதை தூத்துக்குடி மாநகராட்சி உறுதி செய்ய வேண்டும் என்று பொதுமக்கள் மற்றும் நோயாளிகள் கோரிக்கை விடுத்துள்ளனர். மருத்துவமனைக்கு வரும் ஏழை, எளிய மக்களின் நம்பிக்கையாக இருக்கும் அம்மா உணவகத்தில் உணவு தட்டுப்பாடு ஏற்படாமல் இருக்க அதிகாரிகள் உடனடியாக கவனம் செலுத்த வேண்டும் என்பதே அனைவரின் எதிர்பார்ப்பாக உள்ளது.