சிவகங்கை அருகே பெண் காவலர் ஒருவர் கூட்டுப் பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளாக்கப்பட்டதாக வெளியாகியுள்ள தகவல் மிகுந்த அதிர்ச்சியையும் வேதனையையும் ஏற்படுத்தியுள்ளதாக புரட்சி பாரதம் கட்சியின் தலைவர் எம். ஜெகன் மூர்த்தி தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழகத்தில் பெண்களுக்கு எதிரான பாலியல் குற்றங்கள் மற்றும் வன்முறைச் சம்பவங்கள் தொடர்ந்து அதிகரித்து வருவது மிகுந்த கவலைக்குரியதாக உள்ளது. நாள்தோறும் வெளியாகும் இதுபோன்ற செய்திகள், பெண்களின் பாதுகாப்பு குறித்த அச்சத்தை பொதுமக்கள் மத்தியில் அதிகரித்து வருவதாகக் குறிப்பிட்டுள்ளார்.
பொதுமக்களின் பாதுகாப்பிற்காக சட்டம் ஒழுங்கைக் காக்கும் பொறுப்பில் இருக்கும் பெண் காவலரே இத்தகைய கொடூரத்திற்குப் பலியாகியிருப்பது மிகவும் கண்டனத்திற்குரியது என்றும், இது குற்றவாளிகளுக்கு சட்டத்தின் மீதும் அரசின் மீதும் அச்சம் இல்லாத நிலையை வெளிப்படுத்துவதாகவும் அவர் தெரிவித்துள்ளார். இந்தச் சம்பவத்தில் தொடர்புடைய அனைத்து குற்றவாளிகளையும் உடனடியாகக் கைது செய்து, குண்டர் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும், நீதிமன்றத்தின் மூலம் அவர்களுக்கு கடுமையான மற்றும் முன்மாதிரியான தண்டனை பெற்றுத்தர அரசு விரைவான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என வலியுறுத்தியுள்ளார்.
மேலும், சட்டம் ஒழுங்குப் பணியில் ஈடுபடும் பெண் காவலர்களின் பாதுகாப்பை உறுதி செய்ய தனித்துவமான பாதுகாப்பு நடவடிக்கைகளை அரசு மேற்கொள்ள வேண்டும் என்றும், அவர்கள் அச்சமின்றி பணியாற்றக்கூடிய சூழலை உருவாக்க வேண்டியது அரசின் கடமை என்றும் தெரிவித்துள்ளார். பெண்களுக்கு எதிரான குற்றங்களைத் தடுக்க தமிழக அரசு உடனடி மற்றும் கடுமையான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என புரட்சி பாரதம் கட்சியின் தலைவர் எம். ஜெகன் மூர்த்தி கேட்டுக்கொண்டுள்ளார்.