Breaking News

2வது நாளாக தூத்துக்குடியில் சாரல் மழை: விவசாயிகள் மகிழ்ச்சி – உப்பு உற்பத்தி பாதிப்பால் 25 ஆயிரம் தொழிலாளர்கள் அவதி!!

  • Share on

தூத்துக்குடி மாவட்டத்தில் நேற்று பகலில் தொடங்கிய சாரல் மற்றும் மிதமான மழை, இன்று 2வது நாளாகவும் தொடர்ந்து பெய்து வருகிறது. இந்த மழையால் விவசாயிகள் மகிழ்ச்சியடைந்துள்ள நிலையில், உப்பு உற்பத்தி முற்றிலும் பாதிக்கப்பட்டதால் சுமார் 25 ஆயிரம் தொழிலாளர்கள் வேலைவாய்ப்பை இழக்கும் நிலை ஏற்பட்டுள்ளது.


தொடர்ச்சியான மழையால் தூத்துக்குடி நகரின் பல தாழ்வான பகுதிகளிலும், வடிகால் வசதி இல்லாத திருச்செந்தூர் பிரதான சாலை உள்ளிட்ட இடங்களிலும் மழைநீர் ஆறுபோல் தேங்கி நிற்கிறது. இதனால் பொதுமக்களும் வாகன ஓட்டிகளும் சிரமத்திற்கு உள்ளாகியுள்ளனர். கடும் கோடை வெப்பம் மற்றும் தண்ணீர் பற்றாக்குறையால் வறண்டிருந்த தாமிரபரணி வடகால் பாசனப் பகுதிகளான பேய்குளம், பெட்டைகுளம், கோரம்பள்ளம் உள்ளிட்ட பகுதிகளில் சுமார் 5 ஆயிரம் ஏக்கர் விவசாய நிலங்கள் இந்த மழையால் பயனடைந்துள்ளன. குறிப்பாக ஆயிரக்கணக்கான ஏக்கரில் பயிரிடப்பட்டுள்ள வாழைத்தோட்டங்களுக்கு தேவையான ஈரப்பதம் கிடைத்துள்ளதால், மோட்டார் மூலம் நீர் பாய்ச்சுவதற்கான செலவும் குறைந்துள்ளது.


இது குறித்து வேளாண்மைத் துறையால் பாராட்டப்பட்ட விவசாயி இளங்கோவன் கூறுகையில், “மழையால் விவசாய நிலங்கள் புத்துயிர் பெற்றுள்ளன. எனினும், உளுந்து அறுவடையில் ஈடுபட்டுள்ள விவசாயிகளுக்கு சிறிதளவு சிரமம் ஏற்பட்டுள்ளது” என்றார். மறுபுறம், முத்தையாபுரம், முள்ளக்காடு, பழையகாயல், புல்லாவழி உள்ளிட்ட கடற்கரையோர பகுதிகளில் உள்ள உப்பளங்களில் மழைநீர் தேங்கியதால் உப்பு உற்பத்தி முற்றிலும் தடைபட்டுள்ளது. மீண்டும் உற்பத்திப் பணிகள் தொடங்க குறைந்தபட்சம் ஒரு வாரம் ஆகும் என உற்பத்தியாளர்கள் தெரிவித்துள்ளனர்.


இதன் காரணமாக சுமார் 25 ஆயிரம் தொழிலாளர்கள் தற்காலிகமாக வேலைவாய்ப்பை இழந்துள்ளனர். அதே நேரத்தில், கடந்த சில வாரங்களாக கடுமையாக வீசிய வெப்பக்காற்று குறைந்து, தூத்துக்குடி முழுவதும் குளிர்ச்சியான சூழல் நிலவி வருவது பொதுமக்களுக்கு நிம்மதியை அளித்துள்ளது.


  • Share on

பனை கள் இறக்க அனுமதி வழங்க வேண்டும்; இல்லையெனில் 10 லட்சம் பனை விவசாயிகளை திரட்டி போராட்டம் – வழக்கறிஞர் சிலுவை எச்சரிக்கை!!

பவள விழா கண்ட வ.உ.சி. கல்லூரி: ‘MEMORABILIA’ நூல் மற்றும் ‘VOCC DIGITAL DIARY’யை வெளியிட்டார் முன்னாள் முதல்வர் மு.க. ஸ்டாலின்!!

  • Share on

Trending News