“சிறகை விரி, வானமே எல்லை” என்ற இலட்சிய முழக்கத்துடன் செயல்பட்டு வரும் தொடுவானம் கலை இலக்கியப் பேரவையின் 40-வது இலக்கிய நிகழ்ச்சி மற்றும் நூல் வெளியீட்டு விழா ஞாயிற்றுக்கிழமை தூத்துக்குடி இரயில் நிலையம் அருகிலுள்ள ஆயர் இல்ல இளையோர் அரங்கத்தில் சிறப்பாக நடைபெற்றது.
நிகழ்ச்சிக்கு தொடுவானம் கலை இலக்கியப் பேரவையின் தலைவர் நெல்லை தேவன் தலைமை வகித்தார். அன்னம் காலாண்டிதழ் ஆசிரியர் பணி. ச.தே. செல்வராசு தலைமை உரையாற்றினார். கருவூலத்துறை பணி நிறைவு அலுவலரும் இலக்கிய ஆர்வலருமான எம்.எஸ். செய்யது முஹம்மது ஷெரீப் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கினார்.
தொடக்க நிகழ்வில் நெல்லை தேவன் வரவேற்புரையாற்றி, பேரவையின் இலக்கியப் பணிகள், வாசிப்பு பழக்கத்தின் அவசியம் மற்றும் சமூகத்தில் இலக்கியத்தின் பங்கு குறித்து எடுத்துரைத்தார். தொடர்ந்து வங்கி மேலாளராக பணியாற்றி ஓய்வு பெற்ற நா. மாணிக்கவாசகம், “கர்ணன் குற்றவாளியா?” என்ற தலைப்பில் சிறப்புரையாற்றினார்.
மகாபாரதத்தின் முக்கிய கதாபாத்திரமான கர்ணனின் வாழ்க்கை, தியாகம், நட்புணர்வு மற்றும் தர்மசங்கடங்களை பல்வேறு கோணங்களில் ஆய்வு செய்து பேசிய அவரது உரை பார்வை யாளர்களின் வரவேற்பைப் பெற்றது. இதனைத் தொடர்ந்து சி. பிரபாவதி எழுதிய “அது ஒரு நிலாக்காலம்” சிறுகதைத் தொகுப்பு நூல் வெளியிடப்பட்டது. நூலை பணி. ச.தே. செல்வராசு வெளியிட, முதல் பிரதியை எம்.எஸ். செய்யது முஹம்மது ஷெரீப் பெற்றுக்கொண்டார். பின்னர் ஏற்புரையாற்றிய சி. பிரபாவதி, நூல் உருவான பின்னணி, கதைகளின் கருப்பொருள் மற்றும் படைப்புப் பயணம் குறித்து விளக்கினார்.
அதனைத் தொடர்ந்து ஏ. சாந்தி பிரபு எழுதிய “கவனமா படிங்க ப்ளீஸ்” கட்டுரைத் தொகுப்பு நூல் குறித்த திறனாய்வு நிகழ்ச்சி நடைபெற்றது. ஓய்வு பெற்ற வரலாற்று ஆசிரியர் ஞா. அல்பர்ட் மற்றும் ஆசிரியரும் பட்டிமன்றப் பேச்சாளருமான ம. தீபு பாரதி ஆகியோர் நூலின் கருத்து ஆழம், சமூகப் பார்வை, மொழிநடை மற்றும் சமகாலச் சிந்தனைகளை விரிவாக ஆய்வு செய்து பாராட்டினர்.
ஏற்புரையாற்றிய நூலாசிரியர் ஏ. சாந்தி பிரபு, எழுத்தின் சமூகப் பொறுப்பு மற்றும் வாசகர்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டிய அவசியம் குறித்து பேசினார். நிகழ்ச்சியின் நிறைவாக கலையின் குரல் அமைப்பின் நிறுவனர் கலைவளர்மணி ப. சக்திவேல் நன்றியுரையாற்றினார். இலக்கிய வளர்ச்சிக்காக தொடர்ந்து செயல்பட்டு வரும் தொடுவானம் கலை இலக்கியப் பேரவையின் பணிகளை பாராட்டிய அவர், எழுத்தாளர்கள், வாசகர்கள் மற்றும் இலக்கிய ஆர்வலர்கள் இணைந்து செயல்பட வேண்டியதன் அவசியத்தை வலியுறுத்தினார். நிகழ்ச்சியில் சங்கர், சகாயராஜ் உள்ளிட்ட எழுத்தாளர்கள், ஆசிரியர்கள், கவிஞர்கள், மாணவர்கள், வாசகர்கள் மற்றும் இலக்கிய ஆர்வலர்கள் பலர் கலந்து கொண்டு விழாவை சிறப்பித்தனர்.