இந்திய விடுதலைப் போராட்ட வரலாற்றில் தியாகச் சுடராகப் போற்றப்படும் மாவீரன் வீரபாண்டிய கட்டபொம்மன் குறித்து அவதூறான கருத்துகளைப் பரப்பியதாக குற்றஞ்சாட்டி, அவரது மூத்த வாரிசுதாரர்கள் கடும் கண்டன அறிக்கையை வெளியிட்டுள்ளனர்.
ஆதனூர், வேடபட்டி வீரபாண்டிய கட்டபொம்மன் மூத்த வாரிசுதாரர்கள் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:
யூடியூபில் "Sharanya Turadi" என்ற சேனலை நடத்தி வரும் நபர், மாவீரன் வீரபாண்டிய கட்டபொம்மன் அவர்களின் வரலாற்றுப் பெருமையையும் தியாகச் சிறப்பையும் களங்கப்படுத்தும் நோக்கில், "கெட்டி பொம்முலு கட்டபொம்மன் ஆன கதை | Kattabomman Cinema Myth vs History Explained" மற்றும் "கொள்ளைக்காரனா? தியாகியா? | Kattabomman Cinema Myth vs History Explained" என்ற இரண்டு வீடியோக்களை வெளியிட்டுள்ளார்.
இந்த வீடியோக்களில் அதிகாரப்பூர்வ வரலாற்று ஆதாரங்கள் எதுவும் இன்றி, வெறும் வணிக நோக்கத்திற்காகவும் விளம்பர லாபத்திற்காகவும் மாவீரன் கட்டபொம்மனின் வரலாறு திரித்துக் கூறப்பட்டுள்ளதாகவும், அவரது புகழுக்கு களங்கம் ஏற்படுத்தும் வகையில் கீழ்த்தரமான அவதூறுகள் பரப்பப்பட்டுள்ளதாகவும் வாரிசுதாரர்கள் குற்றம்சாட்டியுள்ளனர்.
தாய்நாட்டின் விடுதலைக்காக தனது உயிரைத் தியாகம் செய்த மாமன்னரின் வரலாற்றை இழிவுபடுத்துவது ஏற்றுக்கொள்ள முடியாத செயல் என்றும், உலகம் முழுவதும் போற்றப்படும் வீரபாண்டிய கட்டபொம்மனின் தியாக வரலாற்றை சிதைக்கும் முயற்சி சமூக மக்களின் உணர்வுகளை கடுமையாகப் புண்படுத்தியுள்ளதாகவும் அவர்கள் தெரிவித்துள்ளனர்.
வரலாற்று உண்மைகளைத் திரித்து பொதுமக்களிடையே தவறான தகவல்களைப் பரப்பும் இத்தகைய செயல்களை தாங்கள் வன்மையாகக் கண்டிப்பதாகவும், சம்பந்தப்பட்ட யூடியூப் சேனலில் வெளியிடப்பட்டுள்ள அந்த இரண்டு வீடியோக்களையும் உடனடியாக நீக்க வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்துள்ளனர்.
மேலும், அவதூறு வீடியோக்கள் உடனடியாக நீக்கப்படாவிட்டால், சம்பந்தப்பட்ட நபர் மீது சிவில் மற்றும் கிரிமினல் சட்டப் பிரிவுகளின் கீழ் நீதிமன்றத்தில் வழக்குத் தொடரப்பட்டு, சட்டப்பூர்வமான அனைத்து நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்படும் என வீரபாண்டிய கட்டபொம்மன் மூத்த வாரிசுதாரர்கள் எச்சரித்துள்ளனர்.