வேடநத்தம் பள்ளி மாணவி பாலியல் கொலை வழக்கில் அப்போதைய திமுக அரசின் அரசியல் அழுத்தம் காரணமாக உண்மையான குற்றவாளிகள் காப்பாற்றப்பட்டு, தர்ம முனீஸ்வரன் என்பவர் பொய்யாக கைது செய்யப்பட்டதாக வக்கீல் ராஜசேகர் பரபரப்பு குற்றச்சாட்டை முன்வைத்தார்.
தூத்துக்குடி தென்பாகம் காவல் நிலையம் அருகே உள்ள தனது அலுவலகத்தில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் அவர் பேசியதாவது:
குளத்தூர் அருகே உள்ள வேடநத்தம் கிராமத்தில் கடந்த 10.03.2026 அன்று நடைபெற்ற பள்ளி மாணவி பாலியல் கொலை வழக்கில் தர்ம முனீஸ்வரன் கைது செய்யப்பட்டுள்ளார். ஆனால் இந்த கொலைக்கும் அவருக்கும் எந்தத் தொடர்பும் இல்லை. அப்போதைய திமுக ஆட்சியில் இருந்த முக்கிய அரசியல் பிரமுகர் ஒருவரை காப்பாற்றும் நோக்கத்திலேயே தர்ம முனீஸ்வரன் மீது பொய்யாக வழக்கு பதிவு செய்யப்பட்டு கைது செய்யப்பட்டதாக அவர் குற்றம்சாட்டினார்.
இந்த வழக்கின் ஆரம்பகட்ட விசாரணையிலும், தடயவியல் அறிக்கைகளிலும் இருந்த தகவல்களுக்கு முரணாக பின்னர் காவல்துறையினர் செயல்பட்டதாகவும், உண்மையான குற்றவாளிகளை கைது செய்யாமல் வழக்கை முடிவுக்கு கொண்டு செல்ல முயற்சி நடைபெற்றதாகவும் அவர் கூறினார்.
அப்போதைய முதல்வர் மு.க. ஸ்டாலின், துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின், தூத்துக்குடி நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழி, முன்னாள் அமைச்சர் கீதா ஜீவன் உள்ளிட்டோரின் அரசியல் அழுத்தத்தின் காரணமாகவே தர்ம முனீஸ்வரன் கைது செய்யப்பட்டதாகவும் அவர் தெரிவித்தார்.
மேலும், இந்த வழக்கு தொடர்பான முழு விவரங்களும் அப்போது தூத்துக்குடி மாவட்ட காவல் கண்காணிப்பாளராக இருந்த மதனுக்கு தெரியும் என்றும், அவரிடம் தீவிர விசாரணை நடத்தினால் உண்மை வெளிவரும் என்றும் கூறினார். வேடநத்தம் மாணவி கொலை வழக்கை மறுவிசாரணைக்கு உட்படுத்தி, உண்மையான குற்றவாளிகளை கைது செய்து சட்டத்தின் முன் நிறுத்த வேண்டும் என்றும், அப்போதைய விசாரணை அதிகாரிகளின் செயல்பாடுகள் குறித்தும் தனி விசாரணை நடத்த வேண்டும் என்றும் வக்கீல் ராஜசேகர் வலியுறுத்தினார். இந்த செய்தியாளர் சந்திப்பின்போது குற்றவாளி தாயாரும் உடன் இருந்தார்.