தமிழகத்தில் முதல்வர் விஜய் தலைமையிலான தவெக ஆட்சியில் சட்டம்-ஒழுங்கு முற்றிலும் சீர்குலைந்துள்ளதாகவும், அக்கட்சியினரின் மிரட்டல், அடாவடி மற்றும் பண வசூல் சம்பவங்கள் நாளுக்கு நாள் அதிகரித்து வருவதாகவும் திமுக முன்னாள் அமைச்சரும், தூத்துக்குடி வடக்கு மாவட்டச் செயலாளருமான கீதா ஜீவன் கடுமையாக குற்றம் சாட்டினார்.
தூத்துக்குடியில் இன்று செய்தியாளர்களைச் சந்தித்த அவர், "தற்போது தவெக அரசு புதிய திட்டமாக விளம்பரப்படுத்தி வரும் 'சிங்கப்பெண் காவல்துறை திட்டம்' என்பது புதிய திட்டமே அல்ல. அது திமுக ஆட்சிக் காலத்தில் சிறப்பாக செயல்படுத்தப்பட்ட திட்டம். அதற்கு வெறும் ஸ்டிக்கர் ஒட்டி, புதிய திட்டம் போல மக்களிடம் காட்டி வருகிறார்கள்" என்றார்.
பெண்கள் பாதுகாப்பு குறித்து தொடர்ந்து பேசும் முதல்வர் விஜய், ஸ்ரீவைகுண்டம் பகுதியில் பாலியல் வன்கொடுமையால் பாதிக்கப்பட்ட தனது சொந்தக் கட்சி ரசிகையின் வேதனைக்கு என்ன பதில் சொல்லப் போகிறார் என்றும் அவர் கேள்வி எழுப்பினார். மேலும், அந்தச் சம்பவத்தில் தொடர்புடையதாக கூறப்படும் தவெக சட்டமன்ற உறுப்பினர் மீது இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என்றும், இனிமேலாவது முதல்வர் உரிய நடவடிக்கை எடுப்பாரா என்றும் கீதா ஜீவன் வலியுறுத்தினார்.
தவெக தலைவர்கள் மேடைகளில் பேசும் தனிமனித ஒழுக்கத்திற்கும், அவர்களது கட்சியினர் களத்தில் மேற்கொள்ளும் செயல்பாடுகளுக்கும் எந்த தொடர்பும் இல்லை எனக் கூறிய அவர், "தவெகவினர் எங்குச் சென்றாலும் மிரட்டல் மற்றும் அடாவடி சம்பவங்கள் அதிகரித்து வருகின்றன. தாங்கள் பரிந்துரைக்கும் ஆசிரியர்களுக்கே பள்ளிகளில் வேலை வழங்க வேண்டும் என கல்வி நிறுவனங்களை மிரட்டி வருகின்றனர்" என்றார்.
மேலும், தமிழகத்தின் பல்வேறு தொழிற்சாலைகள் மற்றும் டாஸ்மாக் மதுபானக் கடைகளை மிரட்டி பண வசூலில் தவெகவினர் தொடர்ந்து ஈடுபட்டு வருவதாகவும் அவர் குற்றம்சாட்டினார். தமிழகத்தில் தற்போது நிலவி வரும் கடுமையான மின்சாரத் தட்டுப்பாட்டிற்கு தவெக அரசின் நிர்வாகத் தோல்வியே காரணம் என்றும், ஊடகச் சுதந்திரத்தை பறிக்கும் வகையில் மூன்று முக்கிய தொலைக்காட்சி சேனல்கள் முடக்கப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.
ஆதவ் அர்ச்சுனா தனது மீதுள்ள குற்றச்சாட்டுகளை மறைப்பதற்காகவே தேவையற்ற கருத்துகளை தொடர்ந்து பேசி வருவதாகக் கூறிய கீதா ஜீவன், தற்போதைய அரசியல் சூழலில் எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் தலைமையில் திமுக மிகவும் ஆக்கப்பூர்வமாகவும் பொறுப்புடனும் செயல்பட்டு வருவதாக தெரிவித்தார்.
இந்தச் சந்திப்பின் போது மாநகரச் செயலாளர் ஆனந்த சேகரன், பகுதி செயலாளர்கள் ரவீந்திரன், மகளிர் அணி மாவட்ட அமைப்பாளர் கவிதா தேவி, மாநகர மகளிர் அணி அமைப்பாளர் ஜெயகனி, மாவட்ட தகவல் தொழில்நுட்ப அணி அமைப்பாளர் அபிராமிநாதன், மாவட்ட மருத்துவர் அணி தலைவர் அருண்குமார், பொறியாளர் அணி தலைவர் பழனி, அறங்காவலர் குழுத் தலைவர் செந்தில்குமார் உள்ளிட்ட பலர் உடனிருந்தனர்.