Breaking News

உப்பளத் தொழிலை பாதுகாக்க முதல்வர் ஜோசப் விஜய் நடவடிக்கை எடுப்பார்; கனிமொழி எம்.பி.க்கு உப்பு உற்பத்தியாளர்கள் கண்டனம்!!

  • Share on

தூத்துக்குடி கோவளம், பசுவந்தரை, தன்பாடு பகுதிகளைச் சேர்ந்த சிறிய அளவிலான உப்பு உற்பத்தியாளர்கள் சங்க அலுவலகத்தில் உப்பளத் தொழிலாளர்கள் மற்றும் உற்பத்தியாளர்களின் ஆலோசனைக் கூட்டம் சங்க செயலாளர் சேகர் தலைமையில் நடைபெற்றது. கூட்டத்தில் சங்கத் தலைவர் மந்திரமூர்த்தி, பொருளாளர் பொன்ராஜ், நிர்வாகிகள் சின்னராஜ், முகேஷ், சண்முகவேல், எல்.ஆர். சிவாகர், பாலசுப்பிரமணியன், ஈ. பால், முருகேசன் மற்றும் தொழிலாளர் சங்க நிர்வாகி பொன்ராஜ் உள்ளிட்டோர் முன்னிலை வகித்தனர்.


கூட்டத்திற்குப் பிறகு செய்தியாளர்களை சந்தித்த உப்பு உற்பத்தியாளர்கள் மற்றும் தொழிலாளர்கள், துறைமுகத்தை ஒட்டிய கடலோரப் பகுதியில் கப்பல் கட்டும் விரிவாக்கத் திட்டம் செயல்படுத்தப்பட இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், அந்தத் திட்டம் உப்பளத் தொழிலுக்கு பெரும் பாதிப்பை ஏற்படுத்தும் எனக் கவலை தெரிவித்தனர்.


முள்ளக்காடு, முத்தையாபுரம், புல்லாவழி, பழையகாயல் உள்ளிட்ட பகுதிகளில் செயல்பட்டு வரும் உப்பளங்கள் பாதிக்கப்படும் சூழல் உருவாகியுள்ளதாகவும், ஆயிரக்கணக்கான தொழிலாளர்களின் வாழ்வாதாரம் கேள்விக்குறியாகும் அபாயம் இருப்பதாகவும் அவர்கள் கூறினர். இதனை எதிர்த்து கடந்த காலங்களில் பல்வேறு போராட்டங்களை நடத்தியதாகவும் தெரிவித்தனர்.


சமீபத்தில் நடைபெற்ற சட்டமன்றத் தேர்தலில் முதல்வர் ஜோசப் விஜய் தலைமையிலான புதிய அரசு பொறுப்பேற்றுள்ள நிலையில், உப்பளத் தொழிலாளர்களின் உணர்வுகளையும் வாழ்வாதாரப் பிரச்சினைகளையும் புரிந்து கொண்டு உப்பளத் தொழிலை பாதுகாக்க நடவடிக்கை எடுப்பார் என்ற நம்பிக்கை இருப்பதாக அவர்கள் தெரிவித்தனர். மேலும், தூத்துக்குடி தொகுதியில் வெற்றி பெற்று மீன்வளத்துறை அமைச்சராக பதவியேற்றுள்ள ஸ்ரீநாத்தை சந்தித்து தங்களது கோரிக்கைகளை முன்வைத்ததாகவும், அவர் உப்பளப் பகுதிகளை நேரில் பார்வையிட்டு நம்பிக்கையூட்டும் வகையில் பதிலளித்ததாகவும் கூறினர். அதேபோல் அமைச்சர் கீர்த்தனாவையும் சந்தித்து கோரிக்கைகளை எடுத்துரைத்ததாகவும், அவரும் சாதகமான அணுகுமுறையை வெளிப்படுத்தியதாகவும் தெரிவித்தனர்.


இதற்கிடையில், தூத்துக்குடி மக்களவை உறுப்பினர் கனிமொழியின் செயல்பாடுகள் குறித்து கடும் அதிருப்தி தெரிவித்த உப்பு உற்பத்தியாளர்கள், “தொகுதி மக்களின் வாக்குகளைப் பெற்று வெற்றி பெற்றவர் உப்பளத் தொழிலாளர்களின் வாழ்வாதாரத்தைப் பாதுகாக்க முன்வரவில்லை. கப்பல் கட்டும் விரிவாக்கத் திட்டத்தை தாங்களே கொண்டு வந்ததாக தற்போது கூறுகிறார். தேர்தலுக்கு முன்பு திட்டம் குறித்து தெரியாது என்ற நிலையில் இருந்தவர், தற்போது உண்மையை ஒப்புக்கொள்வதன் மூலம் எங்களை போராட்டத்திற்கு தூண்டியுள்ளார்” என குற்றம்சாட்டினர்.


மேலும், “நாங்கள் கப்பல் கட்டும் தொழிலை எதிர்க்கவில்லை. ஆனால் அதற்காக உப்பளத் தொழிலை அழிக்கக் கூடாது. தூத்துக்குடி வடபகுதியில் சிப்காட் வளாகத்தில் சுமார் 1,200 ஏக்கர் தரிசு நிலம் உள்ளது. அங்கு கப்பல் கட்டும் தளத்தை அமைக்கலாம். ஏற்கனவே எட்டு தொழிற்சாலைகள் இயங்கி வரும் நிலையில், சுற்றுச்சூழல் பாதிப்பு மற்றும் காற்று மாசுபாடு அதிகரித்துள்ளது. இதுபோன்ற சூழலில் மேலும் தொழில்திட்டங்களை மக்கள் வாழ்வாதாரப் பகுதிகளில் கொண்டு வரக் கூடாது” என்று வலியுறுத்தினர். இந்த சந்திப்பில் நிர்வாகிகள் அழகேசன், சண்முகசுந்தரராஜா, சுடலைமணி, சண்முகநாதன், சுயம்பு, ஸ்ரீராம், பொன்ராம், பிரபாகர், பாரத், ராமர் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.


  • Share on

பெண் காவலருக்கே பாதுகாப்பில்லை என்றால் பொதுமக்களின் நிலை என்ன? – சிவகங்கை சம்பவத்திற்கு புரட்சி பாரதம் கட்சி தலைவரும், முன்னாள் எம்எல்ஏ வுமான ஜெகன் மூர்த்தியார் கண்டனம்!!

சத்யா கோப்பையை கைப்பற்றிய சென்னை அணிகள்; தூத்துக்குடியில் அகில இந்திய கைப்பந்து போட்டி கோலாகலம்!!

  • Share on

Trending News