Breaking News

அண்ணாமலையின் புதிய இயக்கத்தில் இணையும் பாஜக நிர்வாகிகள்; தமிழக ஆட்சியைப் பிடிக்கும் என தூத்துக்குடியில் நம்பிக்கை!!

  • Share on

தமிழ்நாடு பாஜகவில் இருந்து விலகிய அண்ணாமலை தொடங்கியுள்ள புதிய அரசியல் இயக்கத்தின் ஆலோசனைக் கூட்டம் தூத்துக்குடி கீழரத வீதியில் உள்ள தனியார் மண்டபத்தில் நடைபெற்றது. கூட்டத்தில், பாஜகவிலிருந்து ஒட்டுமொத்தமாக விலகி அண்ணாமலையின் புதிய இயக்கத்தில் இணைவது, உறுப்பினர் சேர்க்கையை தீவிரப்படுத்துவது உள்ளிட்ட முக்கிய தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.


அண்ணாமலை அண்மையில் பாரதிய ஜனதா கட்சியிலிருந்து விலகி, “WE THE LEADERS” என்ற புதிய அமைப்பைத் தொடங்கி உறுப்பினர் சேர்க்கையை தீவிரப்படுத்தி வருகிறார். அவருக்கு ஆதரவாக தமிழகம் முழுவதும் மக்கள் மற்றும் இளைஞர்கள் திரளாக ஆதரவு தெரிவித்து வருவதாக கூட்டத்தில் கலந்து கொண்டவர்கள் தெரிவித்தனர். இக்கூட்டத்தில் பாஜக தூத்துக்குடி தெற்கு மாவட்ட துணைத் தலைவர் உமரி எஸ். சத்தியசீலன், மாநகர கிழக்கு மண்டல தலைவர் ராஜேஷ் கனி, தெற்கு மண்டல தலைவர் மாதவன், ஓய்வு பெற்ற அரசு ஊழியர் பிரிவு மாவட்ட தலைவர் சின்னத்தங்கம், மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள் பாலபொய்சொல்லான், விந்தியா முருகன், விளையாட்டுப் பிரிவு கண்ணன், துர்க்கையப்பன், கிழக்கு மண்டல செயலாளர் விஜய், இளைஞர் அணி மாவட்ட துணைத் தலைவர் பொன் விக்னேஷ் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.


மேலும், சுடலைமுத்து, ராஜகோபால், கந்தசாமி, ஹரிஹரசுதன், சிவபெருமாள், சந்தனராஜ், முத்து பெரியநாயகம், கருநாகபாண்டி உள்ளிட்ட பலர் பாஜக பொறுப்புகளில் இருந்து விலகி அண்ணாமலையின் புதிய இயக்கத்தில் தங்களை பதிவு செய்து இணைத்துக் கொண்டனர். இதனைத் தொடர்ந்து நடைபெற்ற ஆலோசனைக் கூட்டத்தில், தூத்துக்குடி மாவட்டம் முழுவதும் கட்சி நிர்வாகிகள், இளைஞர்கள் மற்றும் பொதுமக்களை பல்லாயிரக்கணக்கில் புதிய இயக்கத்தில் உறுப்பினர்களாக இணைப்பது என ஒருமனதாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.


கூட்டத்திற்குப் பின்னர் செய்தியாளர்களை சந்தித்த உமரி சத்தியசீலன், “தமிழகத்தில் தற்போது செயல்பட்டு வரும் அரசியல் கட்சிகளுக்கு மாற்றாக மக்கள் சக்தியை மையமாகக் கொண்ட இயக்கமாக அண்ணாமலையின் புதிய அமைப்பு உருவெடுத்து வருகிறது. வருங்காலத்தில் இந்த இயக்கம் தமிழக அரசியலில் முக்கிய சக்தியாக உருவெடுத்து ஆட்சியைப் பிடிக்கும் என்ற நம்பிக்கை எங்களுக்கு உள்ளது” என்றார்.


மேலும், “தமிழ்நாடு பாஜகவின் வளர்ச்சிக்காக அண்ணாமலை மேற்கொண்ட உழைப்பு மிகப்பெரியது. அவரது தலைமையை விரும்பும் பல நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் தற்போது புதிய இயக்கத்தை நோக்கி வருகிறார்கள். தூத்துக்குடி மாவட்ட பாஜக நிர்வாகிகளில் கணிசமானோர் விரைவில் இந்த இயக்கத்தில் இணைய உள்ளனர். மாவட்டத்தின் 15 மண்டலங்களிலும் உறுப்பினர் சேர்க்கை முகாம்கள் விரைவில் தொடங்கப்பட உள்ளன” என்றும் தெரிவித்தார்.


இந்த ஆலோசனைக் கூட்டத்தில் பாஜகவிலிருந்து விலகிய பல்வேறு நிர்வாகிகள், தொண்டர்கள் மற்றும் ஆதரவாளர்கள் கலந்து கொண்டு அண்ணாமலையின் புதிய இயக்கத்திற்கு தங்களது ஆதரவை வெளிப்படுத்தினர்.


  • Share on

உலக நலனும் நல்லாட்சியும் வேண்டி காலபைரவர் தேய்பிறை அஷ்டமி மகாயாகம்; திரளான பக்தர்கள் பங்கேற்பு!!

தூத்துக்குடியில் 27வது ஆண்டு அகில இந்திய சத்யா கோப்பை மின்னொளி கைப்பந்து போட்டி கோலாகல தொடக்கம்!!

  • Share on

Trending News