தூத்துக்குடி மாவட்டத்தில் டாஸ்மாக் கடை அடைப்பு விவகாரத்தில் நடைபெற்றதாகக் கூறப்படும் பல்வேறு முறைகேடுகள் மற்றும் நிர்வாக நடவடிக்கைகளை கண்டித்து, டாஸ்மாக் தொழிற்சங்க போராட்டக்குழு சார்பில் இன்று மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
அரசின் கொள்கை விதிகளுக்கு உட்படாத சில கடைகளை மாவட்ட நிர்வாகம் அதிகார பலத்தை பயன்படுத்தி மூடியதாகவும், கடை அடைப்பால் பாதிக்கப்பட்ட பணியாளர்களுக்கு மாற்று பணியிடங்கள் வழங்குவதில் வெளிப்படைத்தன்மை இல்லாமல் முறைகேடுகள் நடைபெற்றுள்ளதாகவும் தொழிற்சங்கங்கள் குற்றம்சாட்டின.
மேலும், அரசு கொள்கையின்படி மூடப்பட்ட கடைகளில் பணியாற்றிய பணியாளர்களுக்கு மாற்று அரசுப் பணிகளை வழங்க வேண்டும் என்றும், பணியாளர்களிடையே விரோதப் போக்கை தூண்டும் வகையில் செயல்படுவதாகக் கூறப்படும் மாவட்ட மேலாளர் மற்றும் அவருடன் இணைந்து செயல்படும் அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் வலியுறுத்தப்பட்டது.
இந்தக் கோரிக்கைகளை முன்வைத்து, இன்று மாலை 5 மணியளவில் தூத்துக்குடி சிதம்பரம் நகர் பேருந்து நிலையம் அருகே மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்திற்கு தமிழ்நாடு அரசு டாஸ்மாக் ஊழியர் சங்கத்தின் (TNGTEU) மாநில இணைப் பொதுச்செயலாளர் தோழர் மே. மரகதலிங்கம் தலைமை வகித்தார். எல்.எல்.எப். மாநில துணைச் செயலாளர் தோழர் இ. தேவஅருள்ராஜ் முன்னிலை வகித்தார்.
மேலும், ஏ.ஐ.டி.யு.சி. மாவட்டத் தலைவர் தோழர் வி. முருகன், டி.என்.பி.எம்.டி.என்.எஸ். மாவட்டச் செயலாளர் தோழர் வி. வள்ளிநாயகம் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். வரவேற்புரையை டி.என்.ஜி.டி.இ.யு. மாவட்டத் தலைவர் தோழர் எம். அந்தோணிராஜ் வழங்கினார். கண்டன உரையை ஏ.ஐ.டி.யு.சி. மாநில துணைத்தலைவர் தோழர் நெல்லை நெப்போலியன் ஆற்றினார்.
இறுதியாக, விற்பனையாளர் நலச்சங்க மாவட்டத் தலைவர் தோழர் எச். ஆறுமுக மகேஸ் நன்றியுரை வழங்கினார். இதில் பல்வேறு தொழிற்சங்க நிர்வாகிகள் மற்றும் டாஸ்மாக் பணியாளர்கள் திரளாக பங்கேற்றனர். முன்னதாக, இன்று காலை 10 மணியளவில் தூத்துக்குடி மாவட்ட ஆட்சித்தலைவரிடம் கோரிக்கைகள் அடங்கிய மனுவும் அளிக்கப்பட்டது. தமிழக அரசும் டாஸ்மாக் நிர்வாகமும் உடனடியாக தலையிட்டு பாதிக்கப்பட்ட பணியாளர்களுக்கு நீதி வழங்க வேண்டும் என டாஸ்மாக் தொழிற்சங்க போராட்டக்குழு வலியுறுத்தியுள்ளது.