தூத்துக்குடி தூய மரியன்னை கல்லூரியில் மாணவியருக்கான புத்தாக்கப் பயிற்சி நிகழ்ச்சி செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. நிகழ்வின் துவக்கவிழாவிற்கு கல்லூரி முதல்வர் முனைவர் அருட்சகோதரி சி. சிபானா தலைமை தாங்கினார். இதில் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்ட வ.உ.சி. கல்லூரி விலங்கியல் துறை இணைப் பேராசிரியர் முனைவர் ராஜா டி. பேச்சிமுத்து மற்றும் பிராக்ரன் அகாடமியின் நிறுவனர் முனைவர் மனோவா ராஜா ஆகியோர் மாணவியருக்கு சிறப்புரையாற்றினர்.
அவர்கள் பேசுகையில், பாடப்புத்தக அறிவுடன் மட்டுமல்லாமல், பல்துறை சார்ந்த தொழில்நுட்ப அறிவையும் மாணவர்கள் வளர்த்துக் கொள்ள வேண்டியதன் அவசியத்தை வலியுறுத்தினர். இன்றைய போட்டி நிறைந்த உலகில் புதுமை சிந்தனை, தொழில்நுட்ப திறன் மற்றும் தொழில்முனைவு மனப்பான்மை ஆகியவை வெற்றிக்கான முக்கிய அம்சங்களாக விளங்குகின்றன என்று எடுத்துரைத்தனர்.
மேலும், வர்ஷவ் அகாடமி, கின்ஸ் அகாடமி மற்றும் எழுவோம் அகாடமி ஆகிய நிறுவனங்களின் பிரதிநிதிகள் மாணவியருக்கு தொழில்முனைவோர் விழிப்புணர்வு தொடர்பான பயிற்சிகளை வழங்கினர். தொழில் தொடங்குவதற்கான வாய்ப்புகள், திறன் மேம்பாட்டின் அவசியம் மற்றும் சுயதொழில் வாய்ப்புகள் குறித்து விளக்கமளித்தனர். நிகழ்வில் கலந்து கொண்ட மாணவியர் ஆர்வமுடன் பயிற்சியில் பங்கேற்று, இந்நிகழ்ச்சி தங்களின் எதிர்கால வளர்ச்சிக்கு மிகவும் பயனுள்ளதாக அமைந்ததாக கருத்துகளைப் பகிர்ந்து கொண்டனர். இறுதியாக கல்லூரிப் பணியாளர்கள் மற்றும் மாணவியரின் பங்களிப்புடன் நிகழ்ச்சி இனிதே நிறைவடைந்தது.