ஓட்டப்பிடாரம் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட பகுதியில் வாடகை கட்டிடத்தில் செயல்படும் துணை சுகாதார நிலையங்களுக்கு அரசு கட்டிடம் கட்டித் தர வேண்டும் என சட்டசபையில் சண்முகையா எம்எல்ஏ கோரிக்கை விடுத்துள்ளார்.
பட்ஜெட் மீதான மானிய கோரிக்கையின் போது நேற்று சட்டப்பேரவையில் ஓட்டப்பிடாரம் சட்டமன்ற உறுப்பினர் சண்முகையா பங்கேற்று பேசியதில் ஓட்டப்பிடாரம் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட மாப்பிள்ளையூரணி பகுதியில் சிலுவைபட்டி, ராஜபாளையம் டீ. சவேரியார்புரம், மாதா நகர் மற்றும் வடக்கு சோட்டையன் தோப்பு, ஆகிய இடங்களில் துணை சுகாதார நிலையங்கள் வாடகை கட்டிடத்தில் இயங்கி வருகிறது. இப்பகுதிகளில் அரசு நிலங்கள் இருப்பதால் புதிய துணை சுகாதார நிலைய கட்டிடம் கட்டித் தர வேண்டும்.
இதற்கு பதில் அளித்து பேசிய அமைச்சர் மா. சுப்பிரமணியன் தமிழகத்தில் 8,713 துணை சுகாதார நிலையங்கள் மற்றும் 2,286 ஆரம்ப சுகாதார நிலையங்கள் இயங்கி வருகின்றனர்.
இவற்றில் 3000க்கும் மேற்பட்ட துணை சுகாதார நிலையங்கள் வாடகை கட்டிடங்கள் மற்றும் பயன்படுத்த முடியாத அரசு கட்டிடங்கள் இயங்கி வருகின்றன. இவற்றில் கடந்தாண்டில் மட்டும் துணை சுகாதார நிலையங்களுக்கு 1300 புதிய கட்டிடங்கள் கட்டப்பட்டுள்ளன.
எனவே வரும் நாட்களில் உறுப்பினரின் கோரிக்கையானது அரசின் நிதி நிலைமைக்கு உட்பட்டு விகிதாச்சார அடிப்படையில் படிப்படியாக புதிய கட்டடங்கள் கட்டித் தரப்படும் என்றார்.