இந்திய அரசியலமைப்பின் அடிப்படை கோட்பாடுகளுக்கு இணங்க, தீண்டாமையை முழுமையாக ஒழிப்பதற்கும், தொழுநோய் இல்லாத சமூகத்தை உருவாக்குவதற்குமான உறுதிமொழி நிகழ்ச்சி இன்று (30.01.2026) தூத்துக்குடி மாநகராட்சி வளாகத்தில் நடைபெற்றது.


இந்த நிகழ்ச்சிக்கு மேயர் ஜெகன் பெரியசாமி தலைமையிலானார். மாநகராட்சி ஆணையர் ப்ரியங்கா முன்னிலையில் மாநகராட்சி பணியாளர்கள் மற்றும் மாமன்ற உறுப்பினர்கள் உறுதிமொழி எடுத்துக் கொண்டனர்.


தீண்டாமை ஒழிப்பு உறுதிமொழியில், இந்திய அரசியலமைப்பின்படி தீண்டாமை ஒழிக்கப்பட்டுவிட்டது என்பதை உணர்ந்து, மனம், வாக்கு, செயல் என்ற எந்த வகையிலும் சமூக வேற்றுமையை கடைபிடிக்கமாட்டோம் என்றும், சமய வேறுபாடற்ற சுதந்திர சமுதாயத்தை உருவாக்க அரசியலமைப்பின் அடிப்படைக் கருத்துகளுக்கு இணங்க நேர்மையுடன் பணியாற்றுவோம் என்றும் உறுதி அளிக்கப்பட்டது.


அதனைத் தொடர்ந்து, தொழுநோய் எதிர்ப்பு தினத்தை முன்னிட்டு தொழுநோய் ஒழிப்பு உறுதிமொழி எடுக்கப்பட்டது. “தொழுநோய் இல்லாத இந்தியா” என்ற இலக்கை அடைய, தூத்துக்குடி மாவட்டத்தை தொழுநோய் இல்லாத மாவட்டமாக மாற்ற அனைத்து முயற்சிகளையும் மேற்கொள்வோம் என்றும், தொழுநோயை எளிதாக கண்டறிந்து குணப்படுத்த முடியும் என்பதை பொதுமக்களிடம் எடுத்துச் செல்வோம் என்றும் உறுதிமொழியில் தெரிவிக்கப்பட்டது.


மேலும், தொழுநோயால் பாதிக்கப்பட்டவர்களிடம் எந்தவித பாரபட்சமும் காட்டாமல், அவர்களுக்கு எதிரான களங்கம் மற்றும் தனிமைப்படுத்துதலை ஒழித்து, அவர்களை சமுதாயத்தின் ஒரு அங்கமாக இணைப்பதற்கான முயற்சிகளை தனிப்பட்ட முறையிலும், குழுவாகவும் மேற்கொள்வோம் என்றும் உறுதி ஏற்பப்பட்டது.


“களங்கம் தவிர்ப்போம், கண்ணியம் காப்போம்” என்ற முழக்கத்துடன் இந்த உறுதிமொழி நிகழ்ச்சி நடைபெற்றது.