தமிழ் ஈழப் போரின்போது போரை நிறுத்த வேண்டும் என்ற ஒரே கோரிக்கையுடன் தன் உடலில் பெட்ரோல் ஊற்றிக் கொண்டு தீக்குளித்து உயிர்நீத்த தியாகி முத்துக்குமாரின் நினைவு தினம் நேற்று தூத்துக்குடியில் உணர்வுபூர்வமாகக் கொண்டாடப்பட்டது.


தூத்துக்குடி மாவட்ட சமூக செயல்பாட்டாளர்கள் கூட்டமைப்பு சார்பில் நேற்று இரவு மச்சாது நகரில் உள்ள கேம்ஸ் வில்லா அகாடமி அரங்கத்தில் நடைபெற்ற இந்த நினைவேந்தல் நிகழ்ச்சி, தமிழ்நாடு மக்கள் நல இயக்கத்தின் மாநில தலைவர் சாமு காந்தி தலைமையில் நடைபெற்றது. இந்நிகழ்வில் தூத்துக்குடி ஸ்டெர்லைட் மக்கள் கூட்டமைப்பு ஒருங்கிணைப்பாளர் திரு. கிருஷ்ணமூர்த்தி அவர்கள் முன்னிலை வகித்தார். புரட்சி பாரதம் கட்சியின் தூத்துக்குடி மாநகர் மாவட்ட செயலாளர் திரு. மாரி செல்வம் அவர்கள், தூத்துக்குடி கம்யூனிஸ்ட் கட்சி (சிபிஐ-எம்.எல்) மாவட்ட குழு உறுப்பினர் திரு. மின்னல் அம்ஜத் மற்றும் மக்கள் அதிகார கழகத்தைச் சேர்ந்த தோழர் தாளமுத்து செல்வா ஆகியோர் வரவேற்புரை ஆற்றினர்.


இக்கூட்டத்தில் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்ட நாடு கடந்த தமிழ் ஈழ அரசாங்கத்தின் நாடாளுமன்ற உறுப்பினர் தோழர் தமிழினியன் அவர்கள் தலைமை உரையாற்றினார். அப்போது அவர் பேசுகையில், “தமிழ் ஈழம் அடைவதே உலகத் தமிழர்களின் ஒரே நோக்கம். அதற்காக பல்வேறு நாடுகளின் ஆதரவுடன் தொடர்ச்சியான முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.


இந்திய அரசு விடுதலைப் புலிகள் இயக்கத்தின் மீதான தடை உத்தரவை ரத்து செய்ய வேண்டும்; அதற்கு தமிழக அரசு உறுதுணையாக நிற்க வேண்டும். இலங்கை தமிழர்கள் நமது தொப்புள் கொடி உறவுகள். இலங்கையில் தனி ஈழம் அமைந்தால் மட்டுமே ஈழத் தமிழர்களின் வாழ்க்கையில் உண்மையான மறுமலர்ச்சி ஏற்படும்” என வலியுறுத்தினார்.


சமூக செயல்பாட்டாளர்கள் திரு. ராகவராஜ், தோழர் கலைச்செல்வன் ஆகியோர் தியாகி முத்துக்குமாரின் தியாக மரணம் எவ்வாறு நிகழ்ந்தது என்பதை உணர்ச்சி மிக்க வார்த்தைகளில் எடுத்துரைத்தனர். தோழர் அகமது இக்பால் அவர்கள் சிறப்புரை ஆற்றினார். எழுத்தாளர் தமிழ் மாறன் அவர்கள் தியாகி முத்துக்குமாரின் நினைவுகளையும், அவரது தியாகத்தின் வரலாற்று முக்கியத்துவத்தையும் விரிவாக விளக்கிப் பேசினார். இந்நிகழ்ச்சியில் சமூக செயல்பாட்டாளர்கள் திரு. சம்சுதீன், திரு. சங்கர், திரு. சேசுதாசன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். பெண்கள் இணைப்பு குழு சார்பில் திருமதி தமிழ்ச்செல்வி அவர்கள் பங்கேற்று தனது ஆதரவை தெரிவித்தார்.


இதனைத் தொடர்ந்து தோழர் தமிழினியன் அவர்கள் பத்திரிக்கையாளர் சந்திப்பிலும் பங்கேற்று, தமிழ் ஈழம் தொடர்பான அரசியல் நிலைப்பாடுகள் மற்றும் உலக நாடுகளின் அணுகுமுறைகள் குறித்து விரிவாக விளக்கினார். கூட்டத்தின் இறுதியில் தமிழ்நாடு மக்கள் நல இயக்கத்தின் மாநில இளைஞரணி செயலாளர் திரு. எபினேசர் அவர்கள் நன்றியுரை ஆற்றினார்.


முத்துக்குமாரின் தியாகத்தை நினைவுகூரும் இந்த நிகழ்ச்சி, தமிழ் ஈழ விடுதலை கோரிக்கையை மீண்டும் வலுவாக ஒலிக்கச் செய்ததாகப் பங்கேற்பாளர்கள் தெரிவித்தனர்.