பெருந்தலைவர் காமராஜரின் 124-ஆவது பிறந்தநாளை முன்னிட்டு, தி ஐ பவுண்டேஷன் சார்பில் தூத்துக்குடி டி.எம்.என்.எஸ். டாக்டர் சிவந்தி ஆதித்தனார் மெட்ரிகுலேஷன் மேல்நிலைப்பள்ளியில் மாணவ, மாணவிகள், ஆசிரியர்கள் மற்றும் பெற்றோர்களுக்கான இலவச கண் பரிசோதனை மற்றும் சிகிச்சை முகாம் நடைபெற்றது.



பள்ளித் தாளாளரும் செயலாளருமான எஸ்.ஆர்.எஸ். உமரிசங்கர் அவர்களின் வழிகாட்டுதலின்படி நடைபெற்ற இம்முகாமில், தெட்சண மாற நாடார் சங்க டைரக்டர்களும் பள்ளி நலக்குழு உறுப்பினர்களுமான கே. லிங்கச்செல்வன், கே.ஏ.பி. சீனிவாசன், கே.கே.ஆர். ஜெயக்கொடி ஆகியோர் கலந்து கொண்டு முகாமை தொடங்கி வைத்தனர்.



முகாமில் பள்ளி மாணவ, மாணவிகள், ஆசிரியர்கள் மற்றும் பெற்றோர்கள் என மொத்தம் 684 பேர் கலந்து கொண்டு கண் பரிசோதனை செய்துகொண்டனர். பரிசோதனையில் கண் குறைபாடுகள் கண்டறியப்பட்ட மாணவ, மாணவிகளுக்கு தேவையான இலவச தொடர் சிகிச்சைகள் மற்றும் மேல்சிகிச்சைக்கான அனைத்து ஏற்பாடுகளும் தி ஐ பவுண்டேஷன் சார்பில் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டது.



மாணவர்களின் கண் ஆரோக்கியத்தை மேம்படுத்தும் நோக்கில் நடைபெற்ற இந்த இலவச மருத்துவ முகாம் பள்ளி நிர்வாகம், பெற்றோர்கள் மற்றும் பொதுமக்கள் மத்தியில் பாராட்டைப் பெற்றது.