தமிழ்நாடு அங்கன்வாடி ஊழியர் மற்றும் உதவியாளர் சங்கம் (சி.ஐ.டி.யு.) சார்பில், 16 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி வெள்ளிக்கிழமை தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் மாவட்டம் முழுவதும் இருந்து ஏராளமான அங்கன்வாடி ஊழியர்கள் மற்றும் உதவியாளர்கள் திரளாக கலந்து கொண்டு தங்களது கோரிக்கைகளை வலியுறுத்தி முழக்கமிட்டனர்.
அங்கன்வாடி திட்டத்தை தனியார்மயமாக்கும் நடவடிக்கையை அரசு முற்றிலும் கைவிட வேண்டும், குழந்தைகள், கர்ப்பிணிப் பெண்கள் மற்றும் பாலூட்டும் தாய்மார்களுக்கு வழங்கப்படும் சேவைகளை மேலும் வலுப்படுத்த வேண்டும், அங்கன்வாடி ஊழியர்கள் மற்றும் உதவியாளர்களை அரசு ஊழியர்களாக அங்கீகரிக்க வேண்டும், காலியாக உள்ள பணியிடங்களை உடனடியாக நிரப்ப வேண்டும், ஊதிய உயர்வு மற்றும் ஓய்வூதிய சலுகைகளை வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட 16 அம்ச கோரிக்கைகள் ஆர்ப்பாட்டத்தில் வலியுறுத்தப்பட்டன.
மேலும், 10 ஆண்டுகள் பணி நிறைவு செய்த ஊழியர்களுக்கு பதவி உயர்வு வழங்க வேண்டும், சிறு குழந்தைகளுக்கான முன்பள்ளிக் கல்வித் திட்டத்தை வலுப்படுத்த வேண்டும், ஓய்வு பெற்ற ஊழியர்களுக்கு மேம்பட்ட பணப்பலன்கள் வழங்க வேண்டும், புதிய அங்கன்வாடி மையங்களை தொடங்கி தேவையான அடிப்படை வசதிகளை ஏற்படுத்த வேண்டும், மையங்களுக்கு போதிய நிதி மற்றும் உபகரணங்களை வழங்க வேண்டும், எப்.ஆர்.எஸ். (F.R.S.) நடைமுறையை எளிமைப்படுத்த வேண்டும், ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சித் திட்டமான ஐ.சி.டி.எஸ். (ICDS) திட்டத்தை தொடர்ந்து வலுப்படுத்த வேண்டும் என்றும் வலியுறுத்தினர்.
இந்த கோரிக்கைகளை மாநில அரசு உடனடியாக நிறைவேற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என அங்கன்வாடி ஊழியர்கள் மற்றும் உதவியாளர்கள் சங்கத்தினர் வலியுறுத்தினர். ஆர்ப்பாட்டத்திற்கு தமிழ்நாடு அங்கன்வாடி பணியாளர் மற்றும் உதவியாளர் சங்கத்தின் மாவட்ட தலைவர் சந்திரா தலைமை தாங்கினார். மாவட்ட செயலாளர் ஜெப ராணி, மாவட்ட பொருளாளர் ஹேமா ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
நிர்வாகிகள் லதா, உமா ஈஸ்வரி, உமா, மகாலட்சுமி, பாப்பா, ரூபி, எழில், ஆஸ்டினா, மகேஷ்வரி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். மேலும், சி.ஐ.டி.யு. மாவட்ட செயலாளர் ரசல், மாவட்ட தலைவர் பேச்சிமுத்து, மாவட்டக்குழு உறுப்பினர் பெருமாள் உள்ளிட்ட தொழிற்சங்க நிர்வாகிகளும் ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்று கோரிக்கைகளுக்கு ஆதரவு தெரிவித்தனர்.