கோயில்களுக்கு சொந்தமான நிலங்களை தனிநபர்களுக்கு பட்டா வழங்கும் நடைமுறையை தமிழக அரசு உடனடியாக திரும்பப் பெற வேண்டும் என்றும், ஆக்கிரமிப்பில் உள்ள அனைத்து கோயில் நிலங்களையும் மீட்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் தூத்துக்குடி கோரம்பள்ளம் அய்யனடைப்பு ஸ்ரீசித்தர் நகர் ஸ்ரீமகா பிரத்தியங்கிராதேவி – காலபைரவர் சித்தர் பீடத்தின் சுவாமிகள் சாக்தஸ்ரீ சத்குரு சீனிவாச சித்தர் வலியுறுத்தியுள்ளார்.
இதுதொடர்பாக இந்து சமய அறநிலையத் துறை ஆணையர் மற்றும் தமிழக அரசுக்கு அனுப்பியுள்ள கோரிக்கை மனுவில் அவர் கூறியிருப்பதாவது:
தமிழகம் முழுவதும் பாரம்பரிய சிறப்புமிக்க ஏராளமான பெரிய மற்றும் சிறிய கோயில்கள் உள்ளன. இந்த கோயில்களின் அன்றாட பூஜைகள், திருவிழாக்கள் மற்றும் மதச்சார்ந்த பணிகள் தடையின்றி நடைபெறுவதற்காக நமது முன்னோர்கள் கோயில்களுக்கு ஏராளமான நிலங்களை தானமாக வழங்கியுள்ளனர். அந்த நிலங்களில் இருந்து கிடைக்கும் வருவாயே கோயில்களின் பராமரிப்பு மற்றும் வழிபாட்டு செலவுகளுக்கு முக்கிய ஆதாரமாக இருந்து வருகிறது.
ஆனால், தற்போது பல இடங்களில் கோயில் நிலங்களை குத்தகைக்கு எடுத்தவர்கள் மற்றும் வாடகைக்கு பயன்படுத்துபவர்கள் உரிய தொகையை செலுத்தாமல் இருப்பதுடன், சிலர் அந்த நிலங்களை தங்களது சொத்தாக உரிமை கோரி ஆக்கிரமித்தும் வருகின்றனர். இதனால் கோயில்களின் வருவாய் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், கோயில் நிலங்களை மீட்டு பாதுகாக்க வேண்டும் என்று ஆன்மிக அன்பர்கள் தொடர்ந்து வலியுறுத்தி வரும் சூழலில், தமிழக அரசு கோயில் நிலங்களை தனிநபர்களுக்கு பட்டா வழங்கும் நடவடிக்கையில் ஈடுபட்டிருப்பதாக கூறப்படுவது மிகுந்த அதிர்ச்சியையும் வருத்தத்தையும் ஏற்படுத்துவதாக அவர் தெரிவித்துள்ளார்.
கரூரில் சில கோயில்களுக்கு சொந்தமான நிலங்கள் தனிநபர்களுக்கு பட்டா செய்து வழங்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்த நடைமுறை தொடர்ந்தால் எதிர்காலத்தில் பல கோடி ரூபாய் மதிப்புள்ள கோயில் சொத்துக்கள் தனிநபர் வசம் சென்று, கோயில்களின் வருவாய் முற்றிலும் பாதிக்கப்படும் அபாயம் ஏற்படும் என்றும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
எனவே, தனிநபர்களுக்கு வழங்கப்பட்டுள்ள கோயில் நிலங்களுக்கான பட்டாக்களை தமிழக அரசு திரும்பப் பெற வேண்டும். மேலும், கோயில் நிலங்கள் மற்றும் சொத்துக்களை ஆக்கிரமிப்பில் இருந்து மீட்டு பாதுகாக்க உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார்.
இந்த விவகாரத்தில் அரசு உரிய நடவடிக்கை எடுக்காவிட்டால், ஆன்மிக அன்பர்கள், பக்தர்கள் மற்றும் இந்து அமைப்புகள் ஒன்றிணைந்து நடத்தும் போராட்டங்களுக்கு தாம் முழு ஆதரவு வழங்குவதாகவும் சாக்தஸ்ரீ சத்குரு சீனிவாச சித்தர் தனது மனுவில் தெரிவித்துள்ளார்.