தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலில் இந்திய தேசிய காங்கிரஸ் கட்சி எதிர்பார்த்த வெற்றியைப் பெறாத நிலையில், மாநில காங்கிரஸ் தலைமையின் செயல்பாடுகள் குறித்து கட்சிக்குள் அதிருப்தி அதிகரித்து வருகிறது.
இதுகுறித்து தூத்துக்குடி வடக்கு மாவட்ட காங்கிரஸ் தலைவர் பெருமாள்சாமி கதிர்வேல் வெளியிட்டுள்ள அறிக்கையில், கூட்டணியின் முக்கிய அங்கமாக இருந்த காங்கிரஸ் கட்சி தேர்தலில் பின்னடைவை சந்தித்தது கட்சி தொண்டர்கள், மாவட்ட நிர்வாகிகள் மற்றும் செயற்குழு உறுப்பினர்கள் மத்தியில் மிகுந்த வேதனையையும் ஏமாற்றத்தையும் ஏற்படுத்தியுள்ளதாக தெரிவித்துள்ளார்.
மேலும், தற்போதைய தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைமையின் செயல்பாடுகள் தேர்தல் வெற்றிக்குத் தேவையான அளவில் இல்லை என்பதால், மாநில தலைவர் கு.செல்வப்பெருந்தகை தார்மீக பொறுப்பேற்று பதவியை ராஜினாமா செய்ய வேண்டும் என்ற கோரிக்கை மாவட்ட நிர்வாகிகள் மற்றும் செயற்குழு உறுப்பினர்களிடையே வலுத்து வருவதாக கூறியுள்ளார்.
அதேநேரத்தில், கட்சியின் ஒற்றுமை, ஒழுக்கம் மற்றும் ஜனநாயக நடைமுறைகளை மதித்து, உரிய அனுமதி மற்றும் கட்சி தலைமையின் வழிகாட்டுதலுடன் மட்டுமே அதிகாரப்பூர்வ கூட்டங்கள் மற்றும் தீர்மானங்கள் மேற்கொள்ளப்படும் என்றும் அவர் தெளிவுபடுத்தியுள்ளார். கட்சியின் வளர்ச்சி, அடித்தட்டு தொண்டர்களின் உணர்வுகள் மற்றும் எதிர்கால வெற்றியே தங்களின் முக்கிய நோக்கம் என்றும் பெருமாள்சாமி கதிர்வேல் குறிப்பிட்டுள்ளார்.