ஒருகாலத்தில் செய்தியாளர்களிடம் கேள்வி கேட்டவர்... இன்று செய்தியாளர்களின் கேள்விகளுக்கு சட்டமன்ற உறுப்பினராக பதில் அளிக்க இருக்கிறார் ஜெகதீஸ்வரி!


தமிழக அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள தமிழக வெற்றிக் கழகத்தின் வெற்றியாளர்களில், அதிகம் பேசப்படும் பெயராக மாறியுள்ளார் இராஜபாளையம் தொகுதியின் புதிய எம்.எல்.ஏ ஜெகதீஸ்வரி. சாதாரண குடும்பத்தில் பிறந்த அவர், பத்திரிகை துறையில் தனது பயணத்தை தொடங்கினார்.


“போலீஸ் டூடே” இதழில் தலைமை நிருபர், “மக்கள் மாலை”, “ஆணையம்” உள்ளிட்ட ஊடகங்களில் செய்தி ஆசிரியர் என பல்வேறு பொறுப்புகளில் பணியாற்றி தனக்கென அடையாளம் உருவாக்கினார். சிறந்த பத்திரிகையாளருக்கான முனைவர் பட்டமும் பெற்றுள்ளார்.
ஆனால், அவரை மக்கள் மத்தியில் தனித்துவப்படுத்தியது அவரது “விஜய் பற்றும்” தான்!


நடிகர் விஜய்யின் உருவத்தை தனது கைகளில் பச்சைக்குத்தாக வரைந்திருந்த ஜெகதீஸ்வரி, ரசிகையிலிருந்து அரசியல் நிர்வாகியாக உயர்ந்தது சினிமா கதையை மிஞ்சும் வகையில் அமைந்துள்ளது. விஜய் மக்கள் இயக்கத்தில் நகர மகளிரணி பொறுப்பில் தொடங்கிய அவர், தொடர்ந்து மாவட்ட மகளிரணி தலைவி, பின்னர் தமிழக வெற்றிக் கழகத்தின் தென்மேற்கு விருதுநகர் மாவட்ட செயலாளர் என படிப்படியாக உயர்ந்தார்.


கட்சிக்காக தெருக்களில் ஓடியவருக்கு, தேர்தல் களத்தில் ஓட வாய்ப்பு கொடுத்தார் விஜய். அந்த வாய்ப்பை வெற்றியாக மாற்றிய ஜெகதீஸ்வரி, இராஜபாளையம் தொகுதியில் திமுக வேட்பாளர் தங்கபாண்டியனை 10,605 வாக்குகள் வித்தியாசத்தில் வீழ்த்தி அதிரடி வெற்றி பெற்றுள்ளார்.


“நியூஸ் எழுதின கையால் இப்போது சட்டம் எழுதப் போகிறார்!” என அவரது ஆதரவாளர்கள் உற்சாகமாக கூறி வருகின்றனர். செய்தியாளர் மேசையிலிருந்து சட்டமன்ற இருக்கை வரை — ஜெகதீஸ்வரியின் பயணம் தற்போது அரசியல் உலகின் ஹாட் டாப்பிக்காக மாறியுள்ளது.