தென்காசி மாவட்டம் ஆலங்குளம் அருகே உள்ள மருதம்புத்தூர் கிராமத்தில் கடந்த 07.04.2026 அன்று நடைபெற்ற துப்பாக்கிச் சூடு சம்பவத்தில் பாதிக்கப்பட்ட பனை விவசாயி மணிகண்டனுக்கு நீதி கோரி அவரது மனைவி பொன்மணி சாகும்வரை உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபடுவதாக அறிவித்துள்ளார்.


இந்த விவகாரம் தொடர்பாக தூத்துக்குடியில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில், சான்றோர் வழக்கறிஞர் கூட்டமைப்பு தமிழ்நாடு நிறுவனர் வழக்கறிஞர் S.P.சிலுவை நாடார் B.A., B.L., பேசுகையில், மருதம்புத்தூரைச் சேர்ந்த மணிகண்டன் மீது காவல் உதவி ஆய்வாளர் இசக்கி ராஜா இரு கால்களிலும் நான்கு தோட்டாக்கள் சுட்டதாகவும், அதனால் அவர் தற்போது நடக்க முடியாத நிலையில் சிகிச்சை பெற்று வருவதாகவும் தெரிவித்தார்.


மேலும், இந்த சம்பவத்தில் சம்பந்தப்பட்ட காவல் உதவி ஆய்வாளர் இசக்கி ராஜாவை உடனடியாக கைது செய்து, காவல்துறையிலிருந்து நிரந்தரமாக நீக்கம் செய்ய வேண்டும் என்றும் வலியுறுத்தினார். இதற்காக வரும் 26.05.2026 அன்று ஆலங்குளத்தில் உள்ள பெருந்தலைவர் காமராஜர் சிலை முன்பு மணிகண்டனின் மனைவி பொன்மணி சாகும்வரை உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட உள்ளதாக அறிவிக்கப்பட்டது. தற்போது மூன்று மாத கர்ப்பிணியாக உள்ள பொன்மணி, “என் கணவருக்கு நீதி கிடைக்க வேண்டும்; இனி எந்த பனை விவசாயிக்கும் இத்தகைய கொடுமை நடக்கக்கூடாது” என்ற நோக்கத்தில் இந்த முடிவை எடுத்துள்ளதாக கூறப்பட்டது.


மேலும், இந்த போராட்டத்திற்கு ஆதரவாக தூத்துக்குடி, திருநெல்வேலி, கன்னியாகுமரி மற்றும் தென்காசி மாவட்டங்களில் உள்ள வியாபாரி சங்கங்களிடம் முழு கடையடைப்பிற்கு ஆதரவு கோரப்படும் என்றும், தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் காமராஜர் சிலை முன்பு பொதுமக்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டது.


செய்தியாளர்களிடம் பேசிய பொன்மணி, “என் கணவரை சுட்ட காவல் உதவி ஆய்வாளர் இசக்கி ராஜாவை கைது செய்து சிறையில் அடைக்க வேண்டும். என் கணவருக்கு தமிழக அரசு நிவாரணத் தொகையும் அரசு வேலைவும் வழங்க வேண்டும். எந்த நீதியும் கிடைக்கவில்லை என்றால், மே 26ஆம் தேதி ஆலங்குளத்தில் சாகும்வரை உண்ணாவிரதம் இருப்பேன்” என்று தெரிவித்தார். இந்த செய்தியாளர் சந்திப்பில் வழக்கறிஞர் திலக் மற்றும் வழக்கறிஞர் நம்பிராஜனும் உடனிருந்தனர்.