நாட்டின் பொருளாதாரத்தை வலுப்படுத்த மக்கள் பொறுப்புணர்வுடன் செயல்பட வேண்டும் என்றும், தேவைக்கு அதிகமாக தங்கம் வாங்குதல், வெளிநாட்டு சுற்றுலா மற்றும் தனியார் வாகன பயன்பாட்டை குறைக்க வேண்டும் என பிரதமர் நரேந்திர மோடி அறிவுறுத்தியுள்ளதாக பாஜக ஊடகப்பிரிவு மாநிலச் செயலாளர் அன்னபூர்ணா பிள்ளை தெரிவித்துள்ளார்.


இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியதாவது:


இந்தியா உலகில் அதிக தங்கம் இறக்குமதி செய்யும் நாடுகளில் ஒன்றாக உள்ளது. இந்தியாவில் பயன்படுத்தப்படும் பெரும்பாலான தங்கம் வெளிநாடுகளில் இருந்து இறக்குமதி செய்யப்படுகிறது. இதற்காக ஆண்டுதோறும் பல பில்லியன் டாலர்கள் வெளிநாடுகளுக்கு செல்கின்றன. இதனால் நாட்டின் அன்னியச் செலாவணி கையிருப்பில் அழுத்தம் ஏற்படுகிறது.


ஒரு குடும்பத்தில் வருமானத்தை விட அதிகமாக ஆடம்பர செலவுகள் செய்தால் கடன் சுமை அதிகரிப்பது போல, ஒரு நாடும் அதிகமாக வெளிநாடுகளில் இருந்து பொருட்களை வாங்கி பணத்தை வெளியே அனுப்பினால் பொருளாதார சிக்கல்கள் உருவாகும்.


தங்கம் வாங்குவது தவறு அல்ல. ஆனால் தேவைக்கு அதிகமாக மக்கள் தங்கத்தில் முதலீடு செய்தால், அந்த பணம் தொழில் வளர்ச்சி, தொழிற்சாலை, விவசாயம், சிறு தொழில் மற்றும் வேலைவாய்ப்பு உருவாக்கம் போன்ற துறைகளுக்கு செல்லாமல் முடங்கிவிடுகிறது. அதே பணம் வங்கிகளில் சேமிக்கப்பட்டால், வங்கிகள் அதை கடனாக வழங்கி புதிய தொழில்கள் உருவாக உதவ முடியும்.


மேலும், தேவையற்ற வெளிநாட்டு சுற்றுலா பயணங்களையும் மக்கள் குறைக்க வேண்டும் என பிரதமர் கூறியுள்ளார். வெளிநாடு செல்லும் போது ஹோட்டல், உணவு, போக்குவரத்து மற்றும் பொருட்கள் வாங்குதல் உள்ளிட்ட அனைத்திற்கும் டாலர் போன்ற அன்னிய நாணயங்களில் செலவு செய்ய வேண்டியுள்ளது. இதுவும் இந்திய பணம் வெளிநாடுகளுக்கு செல்ல காரணமாகிறது.


அதேபோல், மக்கள் தனிப்பட்ட வாகன பயன்பாட்டை குறைத்து பேருந்து, ரயில் போன்ற பொதுப் போக்குவரத்தை அதிகமாக பயன்படுத்த வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார். இந்தியா பயன்படுத்தும் பெட்ரோல் மற்றும் டீசலின் பெரும்பகுதி வெளிநாடுகளில் இருந்து இறக்குமதி செய்யப்படுவதால், அதிக தனியார் வாகன பயன்பாடு நாட்டின் எரிபொருள் இறக்குமதி செலவை உயர்த்துகிறது.


ஒரே பேருந்தில் 50 பேர் பயணம் செய்தால், 50 இருசக்கர அல்லது கார் வாகனங்களுக்கு தேவையான எரிபொருள் மிச்சமாகும். இதன் மூலம் மக்களின் தனிப்பட்ட செலவுகளும் குறையும்; நாட்டின் அன்னியச் செலாவணி செலவும் குறையும். இந்திய ரூபாயின் மதிப்பு வலுவாக இருக்கவும், விலைவாசி கட்டுக்குள் இருக்கவும், வேலைவாய்ப்புகள் அதிகரிக்கவும் நாட்டின் பொருளாதாரம் உறுதியாக இருக்க வேண்டும். அதற்காக மக்கள் சிக்கனத்தையும் பொறுப்புணர்வையும் கடைபிடிக்க வேண்டியது அவசியம் என அன்னபூர்ணா பிள்ளை தெரிவித்துள்ளார்.