தூத்துக்குடி மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் பொதுமக்கள் மற்றும் போக்குவரத்துக்கு இடையூறாக வைக்கப்பட்டுள்ள டிஜிட்டல் பேனர்களை உடனடியாக அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தி, பாரதிய ஜனதா கட்சியின் தூத்துக்குடி கிழக்கு மண்டல தலைவர் ராஜேஷ் கனி மாநகராட்சி ஆணையரிடம் மனு அளித்தார்.


அந்த மனுவில், தமிழக முதல்வர் ஜோசப் விஜய் சமீபத்தில் வெளியிட்ட அறிவிப்பில், பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படும் வகையில் டிஜிட்டல் பேனர்கள் மற்றும் விளம்பர பதாகைகள் வைக்கக் கூடாது என்று தெரிவித்திருந்ததை சுட்டிக்காட்டியுள்ளார்.


இந்நிலையில், தூத்துக்குடி மாநகராட்சிக்கு உட்பட்ட பல்வேறு பகுதிகளில் தமிழக வெற்றிக்கழகத்தின் பெயரில் வைக்கப்பட்டுள்ள டிஜிட்டல் பேனர்கள் தற்போது போக்குவரத்துக்கு இடையூறாகவும், விபத்துகள் ஏற்படும் அபாயத்தை உருவாக்கும் வகையிலும் உள்ளதாக குற்றம்சாட்டப்பட்டுள்ளது.


குறிப்பாக சாலையோரங்கள், முக்கிய சந்திப்புகள் மற்றும் பொதுமக்கள் அதிகம் பயன்படுத்தும் இடங்களில் அமைக்கப்பட்டுள்ள பேனர்கள் மக்கள் பாதுகாப்பிற்கு அச்சுறுத்தலாக இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. விதிமுறைகளை மீறி வைக்கப்பட்டுள்ள அனைத்து பேனர்களையும் உடனடியாக அகற்ற மாநகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் மனுவில் கோரப்பட்டுள்ளது.


இந்த மனு அளிக்கும் நிகழ்வில், கிழக்கு மண்டல துணைத் தலைவர் ஜெயரூபி, மண்டல் செயலாளர் விஜயன், ஆன்மீக பிரிவு மாவட்ட தலைவர் ஓம் பிரபு, ஆன்மீக பிரிவு மாவட்ட செயலாளர் ஐயப்பன், ஊடகப்பிரிவு மாவட்ட தலைவர் ஜெயக்குமார் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.