தூத்துக்குடி ரயில் நிலையத்தில் இரட்டை ரயில் பாதை சீரமைப்பு பணிகள் நடைபெறுவதையொட்டி, பயணிகளின் வசதிக்காக கோவில்பட்டி மற்றும் வாஞ்சி மணியாச்சி ரயில் நிலையங்களில் இருந்து தூத்துக்குடிக்கு சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும் என சமூகநலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை அமைச்சரும், தூத்துக்குடி வடக்கு மாவட்ட திமுக செயலாளருமான திருமதி கீதாஜீவன் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:
தூத்துக்குடி ரயில் நிலையத்தில் இரட்டை ரயில் பாதை சீரமைப்புப் பணிகள் தற்போது துவங்கப்பட்டுள்ளன. இதன் காரணமாக வரும் டிசம்பர் 20, 21, 22 மற்றும் 23 ஆகிய தேதிகளில் சென்னை மற்றும் மைசூரிலிருந்து தூத்துக்குடி வந்தடைய வேண்டிய மைசூர் எக்ஸ்பிரஸ் மற்றும் முத்துநகர் எக்ஸ்பிரஸ் ரயில்கள் வாஞ்சி மணியாச்சி ரயில் நிலையத்திலேயே நிறுத்தப்படுவதாகவும், மறுமார்க்கமாக அதே ரயில்கள் வாஞ்சி மணியாச்சி ரயில் நிலையத்திலிருந்தே புறப்படும் எனவும் தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.

இந்த சூழ்நிலையில் தூத்துக்குடி சட்டமன்ற தொகுதியைச் சார்ந்த பொதுமக்கள், சீரமைப்புப் பணிகள் நடைபெறும் காலகட்டத்தில் கோவில்பட்டி மற்றும் வாஞ்சி மணியாச்சி ரயில் நிலையங்களில் இருந்து தூத்துக்குடிக்கு வந்து செல்வதற்கான மாற்று போக்குவரத்து வசதி ஏற்படுத்தித் தருமாறு கோரிக்கை விடுத்தனர். அந்த கோரிக்கையை ஏற்று, டிசம்பர் 20, 21, 22 மற்றும் 23 ஆகிய தேதிகளில் சென்னை மற்றும் மைசூரிலிருந்து கோவில்பட்டி வழியாக வாஞ்சி மணியாச்சிக்கு வரும் எக்ஸ்பிரஸ் ரயில்களில் பயணிக்கும் பயணிகள் தூத்துக்குடி வந்தடைய வசதியாக, கோவில்பட்டி மற்றும் வாஞ்சி மணியாச்சி ரயில் நிலையங்களில் இருந்து தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகம் சார்பில் சிறப்பு பேருந்துகள் இயக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

எனவே, மேற்கண்ட நாட்களில் பயணிகள் தங்களுக்கு ஏற்படும் சிரமங்களைப் பொறுத்துக் கொண்டு, அரசு போக்குவரத்துக் கழகத்தின் சிறப்பு பேருந்துகளை பயன்படுத்தி தூத்துக்குடி வந்தடையுமாறு அவர் கேட்டுக்கொண்டுள்ளார்.