வீரபாண்டிய கட்டபொம்மன் புகழை உலகறியச் செய்யும் பாஞ்சாலங்குறிச்சி நினைவுக்கோட்டையைச் சுற்றியுள்ள சாலைகள் கடுமையாக சேதமடைந்துள்ளதால், அவற்றை உடனடியாக சீரமைத்து புதிய சாலை அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என அருள்மிகு வீரசக்க தேவி ஆலய குழு சார்பில் ஓட்டப்பிடாரம் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் எம்.சி. சண்முகையா அவர்களிடம் மனு அளிக்கப்பட்டது.
1974ஆம் ஆண்டு அன்றைய முதல்வர் கருணாநிதி அவர்களால் புதுப்பிக்கப்பட்ட இந்த வரலாற்றுச் சின்னம், ஓட்டப்பிடாரம் தொகுதியின் பெருமைமிகு அடையாளமாக திகழ்கிறது. ஆனால் வீரசக்க தேவி நுழைவாயில் தொடங்கி நினைவுக்கோட்டையைச் சுற்றியுள்ள சாலை மற்றும் சுற்றுலாத் துறை தங்குமிடம் வரை செல்லும் பாதை முழுவதும் சிதிலமடைந்து, கற்கள் பெயர்ந்து பொதுமக்கள் மற்றும் பக்தர்கள் பெரும் சிரமத்தை எதிர்கொண்டு வருகின்றனர்.
வரும் மே 8 மற்றும் 9ஆம் தேதிகளில் நடைபெறவுள்ள அரசு விழா மற்றும் ஆலயத் திருவிழாவை முன்னிட்டு ஆயிரக்கணக்கானோர் வருகை தர உள்ள நிலையில், தரமான புதிய சாலை அமைக்கும் பணியை விழாவுக்கு முன்பாகவே நிறைவு செய்ய வேண்டும் என மனுவில் வலியுறுத்தப்பட்டுள்ளது.
இந்த மனுவின் போது விழாக்குழு தலைவர் வலசை வி. கண்ணன், செயலாளர் மு. ஆதிசங்கர், பொருளாளர் பி. வரதராஜப் பெருமாள், கௌரவ தலைவர் பி. வெயில்ராஜ், துணைச் செயலாளர்கள் மு. சுரேஷ்குமார், எஸ்.எஸ்.கே. பழனிச்செல்வம், செயற்குழு உறுப்பினர்கள் பி. வீரசங்கர், மு. ஸ்ரீராம கட்டபொம்முதுரை உள்ளிட்டோர் உடன் இருந்தனர்.