தூத்துக்குடியில் மகளிர் உரிமைத் தொகை மற்றும் கோடைகால சிறப்பு தொகுப்பு தொகையாக ரூ.5,000 வழங்கப்பட்டதை முன்னிட்டு நகரம் முழுவதும் கொண்டாட்டக் களைகட்டியது.


தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அறிவித்த 3 மாத மகளிர் உரிமைத் தொகையும், கோடைகால சிறப்பு தொகுப்பும் இணைந்து ரூ.5,000 தொகை ஒரு கோடி 31 லட்சம் மகளிரின் வங்கிக் கணக்குகளில் வரவு வைக்கப்பட்டதை தொடர்ந்து, தூத்துக்குடி வடக்கு மாவட்ட திமுக சார்பில் பழைய பேருந்து நிலையம் அருகே சிறப்பான நிகழ்ச்சி நடைபெற்றது.


சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத் துறை அமைச்சர் கீதாஜீவன் தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்வில், பட்டாசுகள் வெடித்து இனிப்புகள் வழங்கப்பட்டன. மாநகர செயலாளர் ஆனந்த சேகரன் உள்ளிட்ட நிர்வாகிகள், பெண்கள் அணி உறுப்பினர்கள் மற்றும் ஏராளமான பொதுமக்கள் பங்கேற்றனர்.


மகளிர் உரிமைத் தொகை கணக்கில் வரவு வந்த மகிழ்ச்சியில் பெண்கள் உற்சாகக் குரல்கள் எழுப்பினர். சிலர் அமைச்சரின் கைகளை பிடித்து முதல்வருக்கு நன்றி தெரிவித்து, இனிப்பை அமைச்சர் கீதாஜீவனுக்கு ஊட்டி மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர். அந்த தருணம் நிகழ்வின் உச்சக்கட்ட மகிழ்ச்சியாக அமைந்தது.