தூத்துக்குடியில் உள்ள ஹோலி கிராஸ் ஹோம் சயின்ஸ் கல்லூரியில் 13.02.2026 இன்று ஆண்டு விளையாட்டு விழா சிறப்பாக நடைபெற்றது. ஆங்கிலத் துறைத் தலைவர் முனைவர் ஆரோக்கியா வரவேற்புரை வழங்கினார். சிறப்பு விருந்தினராக பில்டர்ஸ் அசோசியேஷன் ஆஃப் இந்தியா தூத்துக்குடி தலைவர் திரு. ஜான் ஜெபமணி கலந்து கொண்டு விழாவைத் தொடங்கி வைத்தார். அவருக்கு கல்லூரி செயலர் அருட்சகோதரி முனைவர் ரோசா குட்டி மற்றும் கல்லூரி முதல்வர் அருட்சகோதரி முனைவர் எம்.எஸ். ரூபா பொன்னாடை போர்த்தி நினைவுப் பரிசு வழங்கினர்.


மாவட்ட ஹாக்கி சங்க செயலாளரும் பயிற்சியாளருமான ஜார்ஜ் எஸ்டர் அவர்களுக்கு கேடயம் வழங்கி கௌரவிக்கப்பட்டது. ஹோலி கிராஸ் பள்ளி தலைமை ஆசிரியர் அருட்சகோதரி ஜாக்லின் பிரகாஸ், கல்லூரி துணை முதல்வர் முனைவர் எஸ்.எம்.டி. மதுரவல்லி, கைப்பந்து மற்றும் கோ-கோ பயிற்சியாளர் ரமேஷ் உள்ளிட்டோர் நிகழ்ச்சியில் பங்கேற்றனர்.


மாணவிகளின் கண்கவர் அணிவகுப்பு அனைவரின் பாராட்டையும் பெற்றது. தொடர்ந்து தேசியக் கொடியேற்றம் நடைபெற்றது. விளையாட்டு வீராங்கனைகள் ஒளித் தீபம் ஏற்றி விழாவை ஆரம்பித்தனர். விளையாட்டு தலைவி செல்வி அர்ச்சனா உறுதிமொழி ஏற்பை நடத்தினார்.


மாணவிகளுக்கும் ஆசிரியர்களுக்கும் பல்வேறு விளையாட்டு போட்டிகள் நடைபெற்றன. வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகள் மற்றும் சான்றிதழ்கள் வழங்கப்பட்டன. சிறப்பு விருந்தினர் தனது உரையில், விளையாட்டு உடல் நலத்தையும் மன உறுதியையும் வளர்க்கும் முக்கிய கருவி எனக் கூறி, மாணவிகள் தொடர்ந்து விளையாட்டில் ஈடுபட வேண்டும் என அறிவுறுத்தினார். உடற்கல்வி பேராசிரியர் தங்கமலர் நிகழ்ச்சியை ஒருங்கிணைத்தார். நன்றி உரையுடன் விழா இனிதே நிறைவுற்றது.