தமிழரின் பண்பாடு, கலை, மருத்துவம், உணவு மரபுகள், நாட்டு நாய்கள் உள்ளிட்ட பாரம்பரியங்களை பொதுமக்களிடம் கொண்டு செல்லும் நோக்கில் நடைபெறும் தமிழன்டா சங்கமம்–2026 விழாவை முன்னிட்டு, தூத்துக்குடியில் 5 கி.மீ. மினி மாரத்தான் போட்டி நேற்று காலை 6 மணிக்கு நடைபெற்றது.
இந்த போட்டியை தூத்துக்குடி மாநகர மேயர் ஜெகன் பெரியசாமி கொடியசைத்து தொடங்கி வைத்தார். தமிழன்டா இயக்கம் மற்றும் கலைக்குழு சார்பில், தமிழரின் நாட்டுப்புற கலைகளை பாதுகாத்து வளர்க்கும் வகையில் 2,000-க்கும் மேற்பட்ட நாட்டுப்புற கலைஞர்கள் பங்கேற்கும் மாபெரும் நிகழ்ச்சி, தூத்துக்குடி காமராஜ் கல்லூரி வளாகத்தில் நடைபெற்று வருகிறது.
ஜனவரி 9, 10, 11 ஆகிய தேதிகளில் நடைபெறும் 3-வது தமிழன்டா சங்கமம் விழாவை முன்னிட்டு, தமிழன்டா இயக்கம், கே. சின்னத்துரை அன் கோ, தமிழ்நாடு மெர்கண்டைல் வங்கி, சத்யா குழுமம், சைன் யோகா பவர், பெருந்தலைவர் மக்கள் நல சங்கம், காமராஜ் கல்லூரி உடற்கல்வித்துறை, காமராஜ் மகளிர் கல்லூரி, கேம்ஸ் வில் ஸ்போர்ட்ஸ் அகடாமி, பிளாக் ஃபாரஸ்ட் லீட் ஹோட்டல் மேனேஜ்மென்ட் கல்லூரி, யோவா அகாடமி, ஸ்பிக் நகர் ரோட்டரி சங்கம், அரவிந்த் கண் மருத்துவமனை, வாசன் கண் மருத்துவமனை ஆகியவை இணைந்து இந்த மாரத்தான் போட்டியை நடத்தின.
போட்டி பள்ளி மாணவர்கள், பள்ளி மாணவியர்கள், கல்லூரி மாணவர்கள், கல்லூரி மாணவியர்கள் மற்றும் 50 வயதுக்கு மேற்பட்டோர் என 5 பிரிவுகளில் நடைபெற்றது. பள்ளி அளவிலான போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு முதல் பரிசாக ரூ.5,000, இரண்டாம் பரிசாக ரூ.3,000, மூன்றாம் பரிசாக ரூ.2,000 வழங்கப்பட்டது. மற்ற பிரிவுகளில் வெற்றி பெற்றவர்களுக்கு தமிழன்டா விருதுகள் மற்றும் சான்றிதழ்கள் வழங்கி கௌரவிக்கப்பட்டனர்.
இந்த நிகழ்ச்சியில் தமிழன்டா இயக்க கலைக்குழு தலைவர் ஜெகஜீவன், கௌரவ தலைவர் ஜோதிமணி, அகாடமி தலைவர் ரிபிள் தார்ச்சியூஸ், உடற்கல்வி ஆசிரியர் குப்புசாமி, திமுக வட்டச் செயலாளர் ரவீந்திரன் உள்ளிட்டோர் பங்கேற்றனர். கல்லூரி மாணவ–மாணவியர்கள் மற்றும் பொதுமக்கள் திரளாக கலந்து கொண்டனர்.