தூத்துக்குடியில் இருந்து சென்னைக்கு கூடுதல் இரவு நேர எக்ஸ்பிரஸ் ரயிலை இயக்க வேண்டும் என பாரதிய ஜனதா கட்சி, தூத்துக்குடி தெற்கு மாவட்டம் சார்பில் தெற்கு ரயில்வே பொதுமேலாளரிடம் கோரிக்கை மனு அளிக்கப்பட்டுள்ளது.
இதுதொடர்பாக பாஜக தூத்துக்குடி தெற்கு மாவட்ட தலைவர் ஆர். சித்ராங்கதன் வெளியிட்டுள்ள அறிக்கையில், தூத்துக்குடியில் இருந்து சென்னைக்கு தற்போது 12693/12694 முத்துநகர் எக்ஸ்பிரஸ் ரயில் மட்டுமே இயக்கப்பட்டு வருவதாக குறிப்பிட்டுள்ளார். இந்த ஒரே ரயிலில் பயணிகள் கூட்டம் அதிகமாக இருப்பதால், முன்பதிவு பெட்டிகள் அனைத்தும் முன்கூட்டியே நிரம்பி விடுவதால், பொதுமக்கள் முன்பதிவு செய்து பயணிக்க முடியாமல் கடும் சிரமங்களை சந்தித்து வருவதாக தெரிவித்துள்ளார்.
மேலும், ரத்து செய்யப்பட்ட தூத்துக்குடி–சென்னை லிங்க் எக்ஸ்பிரஸ் ரயிலுக்கு மாற்றாகவும், நாளுக்கு நாள் அதிகரித்து வரும் பயணிகள் தேவையை கருத்தில் கொண்டும், 22623/22624 மதுரை–தாம்பரம் மகால் எக்ஸ்பிரஸ் ரயிலை தூத்துக்குடி வரை நீட்டித்து தினசரி இயக்கம் வழங்க வேண்டும் என வலியுறுத்தியுள்ளார்.
இந்த ரயில் தூத்துக்குடி வரை நீட்டிக்கப்பட்டால், சென்னைக்கு அதிகாலை நேரத்தில் சென்றடையும் வசதியும், சென்னையிலிருந்து இரவு நேரத்தில் தூத்துக்குடி புறப்படும் வசதியும் கிடைக்கும் என்றும், தஞ்சாவூர்–கும்பகோணம் வழியாக பிரதான ரயில் பாதைக்கு தினசரி நேரடி இணைப்பு கிடைக்கும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
எனவே, தூத்துக்குடி மக்களின் நீண்ட நாள் கோரிக்கையை பரிசீலனை செய்து, மகால் எக்ஸ்பிரஸ் ரயிலை தூத்துக்குடி வரை நீட்டித்து உடனடியாக இயக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என பாஜக சார்பில் தெற்கு ரயில்வே நிர்வாகத்தை ஆர். சித்ராங்கதன் கேட்டுக்கொண்டுள்ளார்.