தூத்துக்குடி T. சவேரியார்புரத்தில் இயங்கி வரும் அரசு இசைப்பள்ளி சிறப்புடன் செயல்பட்டு வருகிறது. இப்பள்ளியில் ஜவஹர் சிறுவர் மன்றம் சார்பில் சனி மற்றும் ஞாயிறு கிழமைகளில் மதியம் 1 மணி முதல் மாலை 4 மணி வரை பரதநாட்டிய வகுப்புகள் நடைபெற்று வருகின்றன. ஆண்டுக்கு வெறும் 200 ரூபாய் மட்டுமே கட்டணமாக வசூலிக்கப்படுவதால், 6 வயது முதல் 16 வயது வரை உள்ள மாணவர்கள் பெரிதும் பயன்பெற்று வருகின்றனர்.


வாரம் தோறும் தூத்துக்குடி மாவட்டத்தில் மக்கள் கூடும் முக்கிய பொது இடங்களில் விழிப்புணர்வு சார்ந்த கலை நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு வருகின்றன. அதன் ஒரு பகுதியாக 10.01.2026 மாலை 5.30 மணிக்கு நிகழ்ச்சி நடத்த ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. சிறிது மழை பெய்ததன் காரணமாக மாணவர்களின் நலனை கருத்தில் கொண்டு, நிகழ்வு இடம் மாற்றப்பட்டு அரசு இசைப்பள்ளி வளாகத்திலேயே நடைபெற்றது. இதில் மாணவர்கள், பெற்றோர்கள் மற்றும் பொதுமக்கள் முன்னிலையில் நிகழ்ச்சி சிறப்பாக அரங்கேறியது.


பரதநாட்டியக் கலைக்கு முக்கியத்துவம் அளிக்கும் வகையில் மாணவர்கள் தங்களின் திறமையை வெளிப்படுத்தி பார்வையாளர்களை ரசிக்க வைத்தனர். பரதநாட்டிய ஆசிரியர்கள் சு. கிருஷ்ணவேணி மற்றும் மு. செல்வகுமாரி தலைமையில் மாணவிகள் ரா. பார்வதி, மு. சௌமியா, தி. பால பிரதிபா, ம. திவ்யஸ்ரீ, கா. ஹன்ஷிகா ஸ்ரீ ஆகியோர் சிறப்பான பரதநாட்டிய நடனங்களை ஆடி பாராட்டுகளை பெற்றனர்.


அரசு இசைப்பள்ளி தலைமை ஆசிரியரின் வழிகாட்டுதலின்படி, அலுவலக பொறுப்பாளர்கள் செ.பு. ஷெஜின் புஷ்ப லதா மற்றும் க. கருப்பசாமி ஆகியோர் நிகழ்வை சிறப்பாக ஒருங்கிணைத்தனர். மேலும் பகுதி நேர நாட்டுப்புற கலை ஆசிரியர்களான புலியாட்ட ஆசிரியர் ச. மாபு சுபஹான், வில்லுப்பாட்டு ஆசிரியர் க. குட்டி ராஜா, கிராமிய பாட்டு ஆசிரியர் கல்லூர் மாரியப்பன், ஒயிலாட்ட ஆசிரியர் முனைவர் சகா. மா. சங்கர் ஆகியோரும் கலந்து கொண்டு நிகழ்ச்சியை சிறப்பித்தனர்.


இந்த வகுப்புகள் மற்றும் கலை நிகழ்ச்சிகள் மூலம் மாணவர்களின் திறன்கள் மேம்படுவதுடன், பாரம்பரிய கலைகள் பொதுமக்களிடையே பரவலாக எடுத்துச் செல்லப்படுகின்றன. பொதுமக்கள் அனைவரும் இந்த அரிய வாய்ப்பை பயன்படுத்திக் கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது.


மேலும் விவரங்களுக்கு அரசு இசைப்பள்ளி தலைமை ஆசிரியர் மு. சிவகாம செல்வி அவர்களை 94877 39296 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம்.


வாழ்க கலை… வளர்க கலை!