தூத்துக்குடி திமுக தலைவரும் தமிழக முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின் ஆணைக்கிணங்க, தமிழ்நாடு மீனவர் நலவாரிய உறுப்பினர் சேர்க்கை சிறப்பு முகாம் தூத்துக்குடி மாவட்டத்தில் திரேஸ்புரம் மீன்பிடி இறங்குதளம், தூத்துக்குடி மீன்பிடி துறைமுகம் மற்றும் பாத்திமாநகர் ஆகிய மூன்று இடங்களில் சிறப்பாக நடைபெற்றது.


இந்த முகாமிற்கு வடக்கு மாவட்ட திமுக செயலாளரும் சமூகநலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை அமைச்சருமான கீதாஜீவன் தலைமை வகித்தார். மீன்வளத்துறை இணை இயக்குநர் இளம்வளுதி வரவேற்புரையாற்றினார்.


முகாமை தொடங்கி வைத்து அமைச்சர் கீதாஜீவன் பேசுகையில், 2007 ஆம் ஆண்டு கலைஞர் கருணாநிதி ஆட்சியில் தொடங்கப்பட்ட தமிழ்நாடு மீனவர் நலவாரியம், கடந்த அதிமுக ஆட்சியில் 10 ஆண்டுகள் செயல்படாமல் இருந்த நிலையில், 2021 ஆம் ஆண்டு திமுக ஆட்சி அமைந்ததும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் மீண்டும் செயல்படத் தொடங்கியது என்றார்.


இந்த நலவாரியத்தின் பயன்கள் அனைத்து மீனவர்களுக்கும் கிடைக்க வேண்டும் என்பதே அரசின் நோக்கம். மீன்பிடி தொழிலுடன் தொடர்புடைய வலை பின்னுபவர்கள், ஏலம் விடுவோர், தலைசுமை வியாபாரிகள், மீன் பதப்படுத்தும் தொழிலில் ஈடுபடுபவர்கள் உள்ளிட்ட 15க்கும் மேற்பட்ட பிரிவினர் இந்த நலவாரியத்தில் உறுப்பினர்களாக சேரலாம் என்றார்.


இயற்கையை எதிர்கொண்டு தொழில் செய்யும் மீனவர்களுக்கு அங்கீகாரம் வழங்கும் வகையில் தனி நலவாரியம் அமைக்கப்பட்டு, அதன் தலைவராக ஜோசப் ஸ்டாலின் நியமிக்கப்பட்டுள்ளார். தமிழகத்தின் 16 கடற்கரை மாவட்டங்களிலும் விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் இந்த சிறப்பு முகாம்கள் நடத்தப்பட்டு வருவதாகவும் தெரிவித்தார்.


திமுக ஆட்சி அமைந்த பின் மீன்பிடித் தடை கால நிவாரணம் ரூ.5,000 இலிருந்து ரூ.8,000 ஆக உயர்த்தப்பட்டுள்ளதுடன், டீசல் மற்றும் மண்ணெண்ணெய் மானியமும் வழங்கப்பட்டு வருகிறது. தூத்துக்குடி மீன்பிடி துறைமுகம், திரேஸ்புரம் அண்ணா காலனி, விவேகானந்த நகர் உள்ளிட்ட பகுதிகளில் பல கோடி ரூபாய் மதிப்பில் வளர்ச்சி பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் கூறினார்.


கடந்த ஆண்டு தமிழகத்தில் நடைபெற்ற மீனவர் மாநாட்டில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பல முக்கிய அறிவிப்புகளை வெளியிட்டு, மீனவர்களின் நலனை பாதுகாத்து வருகிறார். கனமழை வெள்ள பாதிப்பின்போது அனைத்து ரேஷன் அட்டைகளுக்கும் ரூ.6,000 வழங்கப்பட்டதுடன், தற்போது பொங்கல் பரிசாக ரூ.3,000 வழங்கப்பட்டுள்ளது என்றார்.


மத்திய அரசு தமிழகத்திற்கு வழங்க வேண்டிய கல்வி நிதி, மக்கள் தொகை அடிப்படையிலான நிதி, ஜிஎஸ்டி பங்குத் தொகை உள்ளிட்டவற்றை வழங்காமல் தொடர்ந்து புறக்கணித்து வருவதாகவும், வருமான வரித்துறை, அமலாக்கத்துறை, தேர்தல் ஆணையம் உள்ளிட்ட அமைப்புகளை பயன்படுத்தி முதலமைச்சரை மிரட்ட முயற்சிப்பதாகவும் அமைச்சர் குற்றம்சாட்டினார்.


அத்தகைய மிரட்டல்களுக்கும் அடிபணியாமல், கொள்கையில் உறுதியாக நின்று, நிதி நெருக்கடிகளுக்கு மத்தியிலும் தமிழக மக்களின் நலனையே முதன்மையாகக் கொண்டு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பணியாற்றி வருவதாக அவர் தெரிவித்தார். ஒன்றிய அரசின் புள்ளிவிபரங்களே தமிழக வளர்ச்சியை ஒப்புக்கொண்டுள்ளதாகவும், மாநகராட்சிப் பகுதிகளில் பல்வேறு கட்டமைப்பு பணிகள் நிறைவேற்றப்பட்டுள்ளதாகவும் கூறினார்.


எதிர்வரும் காலங்களில் திமுக அரசுக்கு உறுதுணையாக இருந்து, இரண்டாவது முறையாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆட்சிப் பொறுப்பேற்க அனைவரும் ஆதரவு தர வேண்டும் என அமைச்சர் கீதாஜீவன் வேண்டுகோள் விடுத்தார்.


விழாவில் தமிழ்நாடு மீனவர் நலவாரிய தலைவர் ஜோசப் ஸ்டாலின், மாநில மீனவரணி துணைச் செயலாளர் புளோரன்ஸ், மாவட்ட மீனவரணி அமைப்பாளர் அந்தோணி ஸ்டாலின் உள்ளிட்ட திமுக நிர்வாகிகள், உள்ளாட்சி பிரதிநிதிகள், மீனவர் சங்க நிர்வாகிகள் மற்றும் ஏராளமான மீனவர்கள் கலந்து கொண்டனர். மீன்வளத்துறை துணை உதவி இயக்குநர் புஷ்ரா ஷப்னம் நன்றியுரையாற்றினார்.