பொங்கல் பண்டிகையை முன்னிட்டு, தூத்துக்குடி பியர்ல் சிட்டி லயன்ஸ் கிளப் சார்பில் ஏழை, எளிய மக்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா சிறப்பாக நடைபெற்றது.
இந்த நிகழ்ச்சி, லயன்ஸ் கிளப் தலைவர் எஸ்.டி.ஆர். பொன் சீலன் தலைமையில் நடைபெற்றது. இதில் லயன்ஸ் கிளப் கவர்னர் ஷாஜகான் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு, சுமார் 3 லட்சம் ரூபாய் மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.
இதன் ஒரு பகுதியாக,
ஏழை, எளிய பெண்களுக்கு தையல் மெஷின்கள், மாற்றுத் திறனாளிகளுக்கு தேவையான உதவி உபகரணங்கள், கல்லூரி மாணவ, மாணவிகளுக்கு கல்விக் கட்டண உதவி, பொங்கல் பரிசாக அரிசி, பலசரக்கு பொருட்கள், ஆதரவற்ற இல்லங்களுக்கு சோப்பு உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்கள் வழங்கப்பட்டன.
இதனைத் தொடர்ந்து, செய்தியாளர்களிடம் பேசிய லயன்ஸ் கிளப் கவர்னர் ஷாஜகான், “தூத்துக்குடியில் கடந்த 2025 ஆம் ஆண்டு மட்டும் ரூ.15 லட்சம் மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை லயன்ஸ் கிளப் வழங்கியுள்ளது. லயன்ஸ் கிளப் என்பது முழுக்க முழுக்க சமூக சேவைக்காக செயல்படும் அமைப்பு.
சர்க்கரை நோய் விழிப்புணர்வு மருத்துவ முகாம்கள், கொரோனா காலக்கட்ட உதவிகள், இயற்கை சீற்றங்களால் மக்கள் பாதிக்கப்படும் நேரங்களில் 24 மணி நேரத்திற்குள் உடனடி உதவிகளை வழங்கும் இயக்கமாக லயன்ஸ் கிளப் செயல்பட்டு வருகிறது.
அரசாங்கத்தின் உதவித் திட்டங்கள் நடைமுறைக்கு வர சில மாதங்கள் ஆகலாம். ஆனால், நாங்கள் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உடனடியாக உதவி செய்து தீர்வு காண்கிறோம். ‘சேவை ஒன்றே எங்களின் நோக்கம்’ என்ற அடிப்படையில் தொடர்ந்து செயல்பட்டு வருகிறோம்.
அரசாங்கத்துடன் இணைந்து சமூக நலனுக்காக பங்களிப்பதும் எங்களின் கடமை” என்றார். இந்த நிகழ்ச்சியில் லயன்ஸ் கிளப் நிர்வாகிகள், உறுப்பினர்கள் மற்றும் பொதுமக்கள் திரளாக கலந்து கொண்டனர்.