தூத்துக்குடி தெற்கு மாவட்ட திமுகவிற்குட்பட்ட ஓட்டப்பிடாரம் சட்டமன்ற தொகுதி வடக்கு ஒன்றிய திமுக இளைஞர் அணி மற்றும் மாணவரணி நிர்வாகிகள் தலைமை கழகத்தால் அறிவிக்கப்பட்டதை தொடர்ந்து, மாவட்ட திமுக செயலாளரும் மீன்வளம், மீனவர் நலன் மற்றும் கால்நடை பராமரிப்பு துறை அமைச்சருமான அனிதா ராதாகிருஷ்ணனை, தூத்துக்குடி மாவட்ட திமுக அலுவலகத்தில் ஓட்டப்பிடாரம் வடக்கு ஒன்றிய திமுக செயலாளர் இளையராஜா தலைமையில் சந்தித்து சால்வை அணிவித்து வாழ்த்து பெற்றனர்.


இதனைத் தொடர்ந்து நடைபெற்ற கலந்துரையாடலில் அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் பேசுகையில், திமுக தலைமைக்கும் தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கும் உறுதுணையாக இருந்து கழகப் பணிகளை ஒற்றுமையுடன் சிறப்பாக முன்னெடுக்க வேண்டும் என அறிவுறுத்தினார். தலைமை அறிவிக்கும் அனைத்து நிகழ்ச்சிகளிலும் தவறாமல் கலந்து கொண்டு, திமுகவின் கொள்கைகள் மற்றும் நல்லாட்சியில் செயல்படுத்தப்படும் மக்கள் நலத்திட்டங்களை பொதுமக்களிடம் கொண்டு சேர்க்க வேண்டும் என்றும் அவர் தெரிவித்தார்.


மேலும், 2026ஆம் ஆண்டு நடைபெறவுள்ள சட்டமன்ற பொதுத்தேர்தலில் 200க்கும் மேற்பட்ட தொகுதிகளில் வெற்றி பெற வேண்டும் என்ற இலக்கை கட்சித் தலைவர் நிர்ணயித்துள்ளதாக குறிப்பிட்ட அமைச்சர், அதனை நடைமுறைப்படுத்த இளைஞர்–மாணவரணியினர் தீவிர களப்பணியாற்ற வேண்டும் என்றார். கடந்த நாடாளுமன்றத் தேர்தலில் தமிழகம், புதுச்சேரி உட்பட 40 தொகுதிகளிலும் திமுக தலைமையிலான இந்தியா கூட்டணி முழுமையான வெற்றி பெற்று இந்தியாவிற்கே வழிகாட்டும் மாநிலமாக தமிழகம் திகழ்ந்ததை சுட்டிக்காட்டிய அவர், அதே போன்று 234 சட்டமன்ற தொகுதிகளிலும் முழுமையான வெற்றியை பெற கட்சியினர் ஒருங்கிணைந்து செயல்பட வேண்டும் என கேட்டுக்கொண்டார்.


உழைப்புக்கு நிச்சயம் அங்கீகாரம் கிடைக்கும்; சிறந்த எதிர்காலம் உறுதியாக அமையும் என்றும் அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் தனது அறிவுரையில் தெரிவித்தார். இந்த சந்திப்பில் ஓட்டப்பிடாரம் வடக்கு ஒன்றிய திமுக செயலாளர் இளையராஜா, மாவட்ட மாணவரணி அமைப்பாளர் அருண்குமார் உள்ளிட்ட பலர் உடனிருந்தனர்.