தூத்துக்குடி நகரின் மையப் பகுதியில் அமைந்துள்ள அன்னை ஸ்ரீ பாகம்பிரியாள் உடனுறை சங்கர ராமேஸ்வரர் திருக்கோவிலில், ஆண்டுதோறும் வெகு விமரிசையாக நடைபெறும் தைப்பூசத் திருவிழா இந்த ஆண்டும் சிறப்பாக நடைபெற்றது.
இந்தத் திருவிழாவில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி, அம்பாளை தரிசனம் செய்து வழிபட்டனர். திருவிழாவை முன்னிட்டு காலை 8.30 மணிக்கு தெப்பக்குளம் முன்புறம் அமைந்துள்ள ஸ்ரீ சோமாஸ்கந்தர் – சுந்தரபாண்டிய விநாயகர் கோவிலுக்கு அருள்மிகு ஸ்ரீ சங்கர ராமேஸ்வரர் மற்றும் அன்னை ஸ்ரீ பாகம்பிரியாள் எழுந்தருளினர்.
தொடர்ந்து காலை 9 மணிக்கு கும்ப பூஜை, 10 மணிக்கு அபிஷேகம், 11 மணிக்கு தீர்த்தவாரி நடைபெற்றது. நண்பகல் 12 மணிக்கு சுவாமி மற்றும் அம்பாளுக்கு அலங்கார தீபாராதனை சிறப்பாக நடத்தப்பட்டது. மாலை மற்றும் இரவு நேரங்களில் பக்தர்களின் திரளான கூட்டம் காணப்பட்டது. இரவு 7 மணிக்கு சுவாமி, அம்பாள் மற்றும் சுந்தரபாண்டிய விநாயகருக்கு சோடச தீபாராதனை நடைபெற்றது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு பக்திப் பரவசத்துடன் சாமி தரிசனம் செய்தனர்.
இந்த பூஜை மற்றும் விழா ஏற்பாடுகளை கோவில் பிரதான பட்டர்கள் செல்வம் மற்றும் சண்முகம் சிறப்பாக செய்திருந்தனர். நிகழ்ச்சியில் சிவன் கோவில் செயல் அலுவலர் தமிழ்ச்செல்வி, அறங்காவலர் குழு தலைவர் கந்தசாமி, அறங்காவலர்கள் பி.எஸ்.கே. ஆறுமுகம், கே.கே.ஜி. குமரன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
இதனிடையே, தெப்பக்குளத்தின் சுவர் சேதமடைந்துள்ளதால் இந்த ஆண்டு தெப்ப உற்சவம் நடைபெறாது என கோவில் நிர்வாகம் அறிவித்துள்ளது. இதன் காரணமாக, சுவாமி மற்றும் அம்பாள் தெப்பக்குளம் ரோட்டை சுற்றி வந்து, பின்னர் ரத வீதி வழியாக கோவிலுக்கு எழுந்தருளினர்.