இயல் இசை நாடக மன்றம் சார்பில் பொங்கல் திருநாளை முன்னிட்டு சென்னையில் பிரமாண்டமான பொங்கல் விழா கோலாகலமாக நடைபெற்றது. தமிழர் பாரம்பரிய கலைகளையும், கிராமிய கலாசாரத்தின் பெருமையையும் எடுத்துக்காட்டும் வகையில் நடைபெற்ற இந்த விழாவில் சகா கலைக்குழு சார்பில் வழங்கப்பட்ட கலை நிகழ்ச்சிகள் பார்வையாளர்களை வெகுவாக கவர்ந்தன.
விழாவில் சகா கலைக்குழு சார்பில் மரக்கால் ஆட்டம், ஒயில் ஆட்டம், மாடு ஆட்டம் உள்ளிட்ட பாரம்பரிய நடனங்கள் சிறப்பாக அரங்கேறின. இதனைத் தொடர்ந்து, பிற கலைக்குழுக்களின் கரகம், சாட்டை குச்சி ஆட்டம், தவிலுடன் நாதஸ்வரம், வெண்கல பம்பை, கை சிலம்பாட்டம், சிலம்பாட்டம், சிக்காட்டம், பெரிய மேளம், கிராமிய பாடல்கள் உள்ளிட்ட பல்வேறு நாட்டுப்புற கலை நிகழ்ச்சிகள் விழாவுக்கு சிறப்பு சேர்த்தன.
இந்த விழாவில் இயல் இசை நாடக மன்ற தலைவர் வாகை சந்திரன், செயலாளர் விஜயா ஆகியோர் முன்னிலையில் பல அரசு அதிகாரிகள் கலந்து கொண்டு நிகழ்ச்சிகளை பாராட்டினர். விழாவை கலை முன்னாள் மன்ற செயலாளர், கலை மாமணி சோமசுந்தரம் அவர்கள் சிறப்பாக ஏற்பாடு செய்திருந்தார்.
நிகழ்ச்சியை கலை வளர்மணி கஜேந்திரன் அவர்கள் தொகுத்து வழங்கினார்.
விழாவில் பங்கேற்ற அனைத்து கலைஞர்களுக்கும் பொங்கல் பரிசாகவும், புத்தாடை வாங்கும் வகையிலும் சிறு தொகை அன்பளிப்பாக வழங்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து, அனைவரும் இணைந்து குழு புகைப்படம் எடுத்துக் கொண்டு விழாவை இனிதே நிறைவு செய்தனர்.
தமிழ் மரபுக் கலைகளை பாதுகாத்து, இளம் தலைமுறைக்கு கொண்டு செல்லும் நோக்கில் நடைபெற்ற இந்த பொங்கல் விழா, கலையும் கல்வியும் இணையும் மேடையாக அமைந்தது.
– கலையும் கல்வியும்
Dr. சகா